முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

mullivaikkalmullivaikalவிடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை அருகே உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விதிமுறைகள் மீறிக் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

தஞ்சை விளார் சாலையில் சுமார் ஓரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அம்முற்றம் கடந்த நவம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உதவியுடன் உலகத் தமிழர் பேரமைப்பின் பழ நெடுமாறனின் முன்முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த நினைவுமுற்றம் பல்வேறு சிக்கல்களுக்குப் பின் உயர்நீதிமன்ற அனுமதியுடன் தான் திறந்துவைக்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த ஒரு வாரத்திலேயே அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதாகக் கூறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.

தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கட்டிட அனுமதியினை ஏன் திரும்பப்பெறக்கூடாது என விளக்கம்கேட்டு விளார் பஞ்சாயத்து முற்றம் அமைப்புக் குழுவினருக்கு நோட்டீசும் அனுப்பியது.

அந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சசிதரன் அரசு முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற அமைப்பாளர்களுடன் அமர்ந்து விவாதித்து, விதிகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து அடுத்த 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டுமென உத்திரவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற அமைப்புக் குழுவினரை செயல்படவிடாமலும் பொதுமக்கள் வருகைக்கு இடையூறு செய்யும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதைத் தடுக்கவேண்டுமென்றும், கடந்த நவம்பர் 13 ஆம் நாளன்று சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டபோது நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது. -BBC

TAGS: