மக்களவைத் தேர்தல்: தனித்து நின்று வெல்வதே இலக்கு

jaya_garlandமக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு வெல்வதே இப்போதைய இலக்கு என்று கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனாலும், கூட்டணி வியூகங்களை அமைக்க தனக்கு அதிகாரம் அளித்து முழு நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி எனவும் அவர் பேசினார். அதிமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் பிரசாரம் செய்து எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

தமிழகத்திலுள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிலையங்கள் ஒரே நேரத்தில் பழுதான காரணத்தால், 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மீண்டும் மின் வெட்டு செய்யும் நிலை உருவானது. இன்றைய தினத்தில் பற்றாக்குறை அளவில் ஆயிரத்து 700 மெகாவாட் மின்சார உற்பத்தியைப் பெருக்கி, மின்வெட்டின் அளவைக் குறைத்துள்ளோம். தமிழகமெங்கும் குறைந்த அளவுக்கே மின்வெட்டு செய்யப்படுகிறது.

மின்சார பிரச்னையில் இருந்து மண்ணெண்ணெய் குறைப்பு வரை தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் அனைத்து சூழ்ச்சிகளாலும் தளர்ந்து விட மாட்டோம். மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு மத்திய அரசின் உதவியில்லாமலேயே தீர்வு காண்போம்.

மத்திய அரசு தமிழகத்தை எந்தெந்த துறைகளில், எந்தெந்த வழிகளில், எந்தத் திட்டங்களில் எல்லாம் பழிவாங்கி வருகிறது என்பதை ஒருநாள் முழுவதும் பேசினால் கூட போதாது.

தூக்கி எறியப்பட வேண்டும்: தமிழகம் வளம்பெறவும், முன்னேறவும், நமக்குரிய சட்டப்பூர்வ, நியாயமான உரிமைகளைப் பெறவும் மத்தியில் இப்போதுள்ள காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். நமக்கு நேசக்கரம் நீட்டும், கருணை காட்டும் அரசு அமைய வேண்டும். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரான அரசாக மத்திய அரசு இருக்கிறது.

வரலாறு காணாத விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, குடும்ப அரசியல், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படுவது, தீவிரவாத அச்சுறுத்தல், மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவை மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்.

நாட்டிலுள்ள முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அதற்குரிய வழியைக் காட்டவும் மத்திய அரசுக்கு திறமையும் திராணியும் இல்லை. சீனா போன்ற பெரு நாடுகள் மட்டுமல்லாது இலங்கை, மியான்மர் போன்ற சிறிய நாடுகள் கூட மிரட்டி வருகின்றன. இதைச் சமாளிக்க முடியாத பலவீனமான அரசாக மத்திய அரசு இருக்கிறது. மத்தியில் உள்ள அரசு, வழிநடத்த ஆள் இல்லாமல் திணறி வருகிறது.

தனித்துப் போட்டியே இலக்கு: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றி பெற்றால் மட்டுமே தேசத்தின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும். தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதே இப்போதைய இலக்கு. ஆனாலும், கூட்டணிக்கான வியூகங்களை அமைக்க எனக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. என்மீது வைத்துள்ள முழு நம்பிக்கைக்கு நன்றி. எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவுக்கு நல்லதையே செய்வேன். கட்சியினர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த சாதனைகள் ஏராளம். அவற்றை பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

“உரிய நேரத்தில் கூட்டணி முடிவு’

மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவுக்குப் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். அப்போது, நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் அப்படி ஏதும் சொல்லவில்லை. பொதுக்குழு தீர்மானத்திலும் அதுபோன்று ஏதுமில்லை. கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். அது அவர்களுடைய உணர்வு. அதை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமையுள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கூட்டணி வியூகங்களை அமைக்க எனக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

TAGS: