ஊழலில் திளைக்கிறது காங்கிரஸ்: ராகுல் மீது மோடி தாக்கு

modi-01Aகாங்கிரஸ் கட்சியினர் ஊழலில் திளைக்கும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகப் பேசுவதாக, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சாடினார்.

மும்பையில் ‘மகா கர்ஜனா’ என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி,

“காங்கிரஸின் மிகப் பெரிய தலைவர் (ராகுல் காந்தி) பேச்சை சனிக்கிழமை கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார். அவரது கட்சியினர்தான் ஊழலில் திளைக்கிறார்கள். உண்மை நிலை அப்படியிருக்க, அவரது பேச்சை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

ஆதர்ஷ் குழுவின் அறிக்கை, அமைச்சர்களைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் அரசோ தனது ஊழல் கறை படிந்த தலைவர்களை காக்கும் வேலையில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பது தெளிவாகிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் கொள்கையுடன் நாட்டை ஆள்வதாக குற்றம்சாட்டிய மோடி, அக்கட்சி தொடர்ந்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், காங்கிரஸ் இல்லாத ஆட்சியை வரவேற்க நாட்டு மக்கள் தயாரக உள்ளதாகவும் கூறினார்.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், மூன்றே ஆண்டுகளில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என, அக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்திருக்கிறார்.

கறுப்பு பணம் விவகாரம் குறித்து அவர் பேசும்போது,

“வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால், மூன்றே ஆண்டுகளில் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வரும்.

அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் வறுமை இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும்” என்றார்.

மேலும், காங்கிரஸ் அரசு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், அப்பிரிவினையை ஆங்கிலேயர்களிடம் காங்கிரஸ் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றும் மோடி குற்றம்சாட்டினார்.

TAGS: