மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும்: ராஜ்நாத் சிங்

Rajnath-Singhமக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகர்ஜனை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம், மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான தெளிவான அழைப்பை மக்கள் விடுத்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவர் என்ற முறையில், “மாற்றம் தேவை’ என்று மக்கள் விரும்புகிறார்கள் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். நாட்டில் காங்கிரஸூக்கு எதிரான போக்கு காணப்படுகிறது.

ஆதர்ஷ் ஊழல் குறித்து விசாரித்த நீதிபதிகள் குழு அளித்த அறிக்கையை மாநில அரசு நிராகரித்துள்ளது. பொதுநலன் கருதி இவ்வாறு செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். ஊழலில் பொதுநலன் ஏதாவது இருக்க முடியுமா? ஊழலுக்கான கவசமாக காங்கிரஸ் மாறிவிட்டது.

ஒரு தேநீர் கடைக்காரர் நாட்டின் பிரதமராக முடியுமா? என்று காங்கிரஸார் கேட்கின்றனர். பராக் ஒபாமா ஆரம்பத்தில் ஐஸ்கிரீம் விற்றார். அப்துல் கலாம் இளமைக்காலத்தில் செய்தித்தாள் விற்றார். ஆப்ரகாம் லிங்கன், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டார். அவர்கள் எல்லாம் முக்கிய பதவிக்கு வர முடிந்தபோது, நரேந்திர மோடியால் ஏன் பிரதமராக முடியாது?

ஊழலில் மூழ்கிக் கிடக்கும் காங்கிரஸார், “நாங்கள்தான் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றினோம்’ என்று பெருமை பேசிக் கொள்கின்றனர். ஆனால், இதற்கான முழுப்பெருமையும் அண்ணா ஹசாரேவையே சேரும். அவரைச் சிறையில் அடைத்த காங்கிரஸ் இப்போது அந்தப் பெருமையைப் பங்குபோட்டுக் கொள்ள முயல்கிறது என்றார் ராஜ்நாத் சிங்.

TAGS: