புதுடெல்லி, டிச. 24–டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது.
டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன் மிகவும் துணிச்சலாக ஆட்சியில் அமர்கிறது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே சொல்லி வருகின்றன. ஆனால் அந்த கோஷத்தை முதன்மைப்படுத்தி முதன், முதலாக ஆம்ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மிக குறுகிய காலத்தில் தலை நகரில் ஆட்சியைப் பிடித்து இருப்பது அரசியல் களத்தில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்த புரட்சியை இளைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றி இருப்பது இந்திய அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கு அவர்கள் வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை டெல்லியில் ஆட்சி செய்த பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வயதானவர்கள்தான். அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர்கள். அவர்களையெல்லாம் விளக்குமாறு சின்னத்தால் அடித்து துரத்தி விட்டு, இளைஞர் பட்டாளத்தை அரசியல் களத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.
முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள அவரும் இன்னமும் இளமை துடிப்புடன்தான் உள்ளார். 45 வயதே ஆகும் அவர் டெல்லியின் மிக இளம் வயது முதல்–மந்திரி என்ற சாதனையை படைக்க உள்ளார்.
அவர் தலைமையில் மந்திரி பதவி ஏற்க போகும் அமைச்சர்கள் அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில மந்திரிசபை ‘‘இளைஞர் பட்டாளம்’’ ஆக காட்சியளிக்க உள்ளது.
கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோ டியா, சவுரப் பரத்வாஜ், வினோத்குமார் பின்னி, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா ஆகிய 5 பேர் மந்திரிகளாவது உறுதியாகி விட்டது. இவர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதல்–மந்திரி ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் பதவியேற்றால் டெல்லியின் முதல் துணை முதல்வர் என்ற சாதனையை படைப்பார்.
கெஜ்ரிவாலின் வலது கரம் போல செயல்பட்டு வரும் மணீஷ் சிசோடியா ஜீ நியூஸ், ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஆவார். தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, கெஜ்ரிவாலுடன் போராட்டத்தில் இணைந்தார்.
கெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர் கெஜ்ரிவாலின் நிழல் மனிதராக கருதப்படுகிறார்.
மந்திரியாக வாய்ப்புள்ள சோம்நாத்துக்கு 39 வயதாகிறது. சுப்ரீம்கோர்ட்டு வக்கீலான அவர் ஆம்ஆத்மியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அதுபோல 39 வயது வினோத்குமார், 2 தடவை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர்.
34 வயது சவுரப் பரத்வாஜ் கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார்.
டெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்தவருமான சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.
அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர் டெல்லியின் மிக இளம் வயது மந்திரியாக இருப்பார்.
இந்த பயணம் இனிதே தொடரட்டும். இதே போல் மட்டற்ற மாநிலத்திலும் நடந்தால் நல்லது.