டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது.
காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயாராகவுள்ள நிலையில், முந்தைய 15 ஆண்டில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து புதிய அரசு விசாரணை நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இதுபற்றி கூறியதாவது:
“ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதில் மாற்றம் ஏதுமில்லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 13-ஆம் தேதியே துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகப் போராடுவது எந்தவொரு முதல்வருக்கும் கடமையாகும். இருப்பினும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்றார்.