தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்கா தவறு செய்து விட்டது

devayani_003இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்க அதிகாரி தவறு செய்து விட்டதாக தேவயானியின் வழக்குரைஞர் டேனியல் அர்ஸ்ஹக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேவயானி கோப்ரகடே மீதான புகாரை விசாரித்து, அவரைக் கைது செய்த அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித், ஆவணங்களை சரிபார்ப்பதில் தவறு செய்து விட்டார்.

அமெரிக்காவில் தேவயானியின் வீட்டில் சங்கீதா ரிச்சர்ட் வீட்டில் பணியாற்றுவதற்கான விசாவுக்காக தாக்கல் செய்யப்பட்ட டிஎஸ்-160 படிவத்தை பரிசீலிக்கையில் ஸ்மித் தவறு செய்துள்ளார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள 4,500 டாலர் (ரூ. 2.8 லட்சம்) சங்கீதா எதிர்பார்க்கும் மாத ஊதியம் என்று அவர் தவறுதலாகப் புரிந்து கொண்டார்.

ஆனால், அது அமெரிக்காவில் தேவயானி பெறும் ஊதியம் என்று விண்ணப்பத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவயானியின் ஊதியம், சங்கீதாவுக்கு மாத ஊதியம் 1,560 டாலர் (ரூ. 96 ஆயிரம்) அளிப்பதற்கு போதுமான அளவு உள்ளதா என்பதை அறியவே தேவயானியின் மாத ஊதியம் 4,500 டாலர் என்று டிஎஸ்-160 விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டு, நடக்கக் கூடாத சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது என்று அர்ஸ்ஹக் தெரிவித்தார்.

இதனிடையே, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தில் தேவயானி இணைவதற்கான அறிவிக்கை ஐ.நா.வுக்கு வந்துள்ளதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் மொரானா சங் தெரிவித்தார்.

TAGS: