28-இல் முதல்வராக பதவியேற்கிறார் கேஜரிவால்

aravindதில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான “ஆம் ஆத்மி’ அரசு சனிக்கிழமை (வரும் 28-ஆம் தேதி) நண்பகல் 12 மணிக்கு பொறுப்பேற்கவுள்ளது. தில்லி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வராக கேஜரிவாலுக்கும், அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதையொட்டி, பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராம்லீலா மைதானத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 31 இடங்களை வென்ற பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்தது. இதையடுத்து 28 இடங்களுடன் இரண்டாம் நிலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க 8 இடங்களில் வென்ற காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆகியோர் ஆதரவு அளிக்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, 18 அம்ச மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு அளித்தால் ஆட்சி அமைக்கத் தயார் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார். இந் நிலையில், பிரச்னை அடிப்படையில் ஆம் ஆத்மி அரசமைய ஆதரவு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை திங்கள்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்தார். அக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நஜீப் ஜங் அனுப்பி வைத்தார். ஆம் ஆத்மி அரசின் பதவியேற்பு விழாவை டிசம்பர் 26-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த அரவிந்த் கேஜரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால், அவரது அலுவலகத்தில் இருந்து தில்லி அரசுக்கும், மத்திய உள்துறைக்கும் தகவல் ஏதும் வரவில்லை.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: இந் நிலையில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்த கடிதம் மத்திய உள்துறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு கிடைத்தது. அக் கடிதம் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு புதன்கிழமை காலையில் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, “ஆட்சி அமைக்கும் நடைமுறைகளைத் தொடங்கலாம்’ என்று தில்லி அரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் துணை நிலை ஆளுநரின் செயலகம் அதிகாரப்பூர்வத் தகவலைத் தெரிவித்தது.

புதிய அமைச்சரவையில் மணீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சௌரவ் பரத்வாஜ், கிரீஷ் சோனி, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

ஏற்பாடுகள் தீவிரம்: புதிய அரசு பதவியேற்பு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை முதல் வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் ராம்லீலா மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகளைத் தொடங்கி விட்டனர். 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 10-12 லட்சம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்வையிட முடியும். அதற்கு வசதியாக பந்தல், விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மணீஷ் சிசோடியா அப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். பதவியேற்பு விழாவையொட்டி, பொதுமக்கள் தங்குதடையின்றி வந்து செல்லும் வகையில், போக்குவரத்து வசதிகளும், மைதானப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய தில்லி போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்களுக்கு அழைப்பு: தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆம் ஆத்மி அரசு பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஆம் ஆத்மி தலைமையிலான புதிய அரசு வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பொறுப்பேற்கவுள்ளது. அதில் கலந்து கொள்ளும்படி அண்ணா ஹசாரே, கிரண் பேடி, ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோரைக் கேட்டுக் கொள்வோம். “முக்கியப் பிரமுகர்கள்’ என்று குறிப்பிட்டு யாருக்கும் பிரத்யேக அழைப்பிதழ் அனுப்ப மாட்டோம். பொதுமக்கள் பெருந்திரளாக ராம்லீலா மைதானத்துக்கு வந்து பதவியேற்பு விழாவைக் காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் கேஜரிவால்.

TAGS: