நேர்மையான அதிகாரிகளுக்கு கேஜரிவால் அழைப்பு

kejerwalநேர்மையான அதிகாரிகள் கடிதம், குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

தில்லி பிரதேச முதல்வராக சனிக்கிழமை (டிசம்பர் 28) பொறுப்பேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், கெüஷாம்பியில் உள்ள அவருடைய இல்லம் எதிரே வியாழக்கிழமை ஜனதா தர்பார் என்ற மக்கள் சபையை நடத்தினார்.

இதில் வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மின்கட்டணம், குடிநீர் பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்கள் கேஜரிவாலிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர். சிலர் பாதுகாப்பை ஏற்கும்படி அவரை கேட்டுக் கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், “நேர்மையானவர்கள் ஒன்று சேர்ந்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை. அதே நேரத்தில் அனைத்து பிரச்னைகளையும் உடனடியாக தீர்ப்பதற்கு என்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. இத் தேர்தலில் கட்சி வெற்றி பெறவில்லை. இது என்னுடைய வெற்றியோ, கட்சியின் வெற்றியோ இல்லை. ஆனால், இது உங்களின் வெற்றி. சாதாரண மனிதர்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தோம். வெற்றி பெற்றோம்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நாங்கள் அமைக்க உள்ள தில்லி பிரதேச அரசில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். ஆட்சியைத் திறமையாக நடத்துவதற்கான புதிய உத்திகளை வகுக்கும் வகையில், நேர்மையான அதிகாரிகளின் உதவியைப் பெற உள்ளோம். அவர்களின் மருத்துவ, ஓய்வூதியம், தாற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். எனவே, நேர்மையான அதிகாரிகள் குறுந்தகவல், மின்னஞ்சல், கடிதம் மூலமாக என்னைத் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

பாதுகாப்பு தேவையில்லை: இதனிடையே காஜியாபாத் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கேஜரிவாலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் படையினர் கெüஷாம்பியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றனர்.

ஏற்கெனவே இரண்டு முறை உத்தர பிரதே மாநில காவல் துறை அளிக்க முன்வந்த பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்ட கேஜரிவால், இந்த முறையும் பாதுகாப்புத் தேவையில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்பு

தில்லியில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்கும் தினம், காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினமான டிசம்பர் 28-ம் தேதி வருகிறது. முதல்வராக கேஜரிவால் பொறுப்பேற்கும் தினத்தன்று காங்கிரஸ் கட்சி 128-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. தில்லி பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்த ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியது. இப்போது அதே காங்கிரஸ் கட்சியின் வெளி ஆதரவுடன் அக் கட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS: