இலங்கை கடற்படை பிரச்னை: தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லி பயணம்

Sri Lankan Navy boats are displayed during a rehearsal for the Independence Day celebration in Colomboசென்னை : பிரதமரை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் 8 பேர் குழு நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அவர்களில் 6 பேர் நாகை, 2 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். முன்னதாக விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டி.நாங்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாதபடி இலங்கை கடற்படை எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதுவரையில் 200க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 70க்கு மேற்பட்ட படகுகளையும் அவர்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். இதை கண்டித்து நாங்கள் தொடர்  உண்ணாவிரத போராட் டம் நடத்தி வருகிறோம்.

தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் திமுக தலைவர்கள் எங்களை சந்தித்து போராட்டத்தை கைவிடுங்கள், டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேச நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என கூறினார்கள். அதன்பேரில் நாங்கள் தற்போது டெல்லி செல்கிறோம். நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறோம். அப்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பது. கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை திரும்ப பெறுவது. மீன் பிடிக்கும் உரிமையை பெறுவது. 2 நாட்டு மீனவர்களிடையே நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி சுமுக தீர்வு காண்பது உள்பட எங்களது பல பிரச்னைகளை எடுத்துரைப்போம். அதோடு, வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து பேச இருக்கிறோம்.

நாங்கள் ரெட்டை மடி வலையை போட்டு மீன் பிடிப்பதாக கூறுவது தவறானது. முறையான வலையை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு இப்போது உடனடி தேவை எங்களுடைய வாழ்வாதாரமான மீன்பிடி தொழில்தான். கச்சத்தீவு மீட்பு எங்களுக்கு முக்கியமல்ல. சுதந்திரமாக மீன்பிடிப்பது தான் எங்களுக்கு முக்கியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

TAGS: