இரு நாட்டு மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு – சல்மான் குர்ஷித்

salman_khurshidஇலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி, திமுகவின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவின் தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துள்ளனர்.

மீனவர் பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்துள்ள சூழலில் மீனவர் பிரதிநிதிகள் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளனர்.

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 227 மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 77 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், இருநாட்டு மீனவர்கள் இடையிலும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுசெய்ய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசிடமும் இலங்கை அரசிடமும் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக நீண்டுகொண்டே செல்லும் இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பல்வேறு மீனவ அமைப்புக்கள் கோரிவருகின்றன. -BBC

TAGS: