புதுடெல்லி, டிச.29–டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார். முன்பு இதே மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் இருந்த போது அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய டெல்லி போலீசார் நேற்று அவரை வரவேற்று பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
பதவி ஏற்பு விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கவும் மாட்டோம், லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் என்று தொண்டர்களுடன் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார். வெறும் உறுதிமொழியுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்வடிவம் காட்டவும் தீவிரமாக உள்ளார்.
ஊழல் லஞ்சம் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக 2 நாளில் டெலிபோன் எண்ணை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடுகிறார். மேலும் மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல அதிரடி கட்டளைகளும் பிறப்பித்துள்ளார். அதன்படி மந்திரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்குகளை பொருத்திக் கொள்ள மாட்டார்கள். அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்பட மாட்டாது.
அச்சுறுத்தல் அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் முடிவு எடுத்துள்ளார். டெல்லியில் எங்கு பார்த்தாலும் அதிகாரிகள் சிகப்பு விளக்கு பொருத்திய கார்களில் வலம் வருகிறார்கள். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டே கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எந்த அதிகாரியும் மதிக்கவில்லை. எனவேதான் சிவப்பு விளக்கு பொருத்தக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் அனைவரும் வி.ஐ.பி.க்கள் போல் வலம் வரக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் அமர்ந்ததும் தனது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அதிகார வர்க்கத்தை மாற்றி அமைத்தார். டெல்லி மாநில அரசின் உயர் அதிகாரிகள் 9 பேர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரிய முதன்மை அதிகாரிதான் முதலில் மாற்றம் செய்யப்பட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளராக உயர் கல்வித் துறை செயலாளர் ராஜேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுத்துள்ளார். தினந்தோறும் நபருக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் அளிப்பதாகவும், மின்சார கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.
இலவச குடிநீர் பற்றிய அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) வெளியிடுகிறார். அதுபோல் மின் கட்டணம் குறைப்பு பற்றிய அறிவிப்பை நாளை மறுநாள் அல்லது புதன்கிழமை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். இதேபோல் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால் பயணிகளின் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கியாஸ் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகின்றன. இதனால் கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ டிைரவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர், மின்சாரத்திற்கு அடுத்தப்படியாக டெல்லியில் இதுவும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னுரிமை அளித்துள்ளார். மக்கள் பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை அளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்த நிலையில் முதல் நாளே அவரது வீட்டின் முன் அரசு பஸ் ஊழியர்கள் 1000 பேர் திரண்டனர். முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்கள்.
டெல்லி நகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள்– கண்டக்டர்கள் 14 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதையடுத்து இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டனர். ‘‘கெஜ்ரிவால் ஜிந்தாபாத்’’ என்று வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் கலந்து கொண்ட அரசு பஸ் டிரைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் 10 ஆண்டுகளாக பணிநிரந்தரம் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறோம். இதுபோல் 14 ஆயிரம் பஸ் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்றார்.
கண்டக்டர் சுரேஷ் கூறுகையில், ‘‘நாங்கள் இங்கு திரண்டு வந்தாலும், எங்களால் டெல்லியில் மற்ற இடங்களில் பஸ் போக்கு வரத்து பாதிக்கப்பட வில்லை. மற்றொரு டிரைவர் தேஷ்பால் கூறும்போது, ‘‘கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது எங்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தார். எனவே அவர் முதல்–மந்திரியாகி விட்டதால் எங்களது கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் இதற்கு முன் முதல்–மந்திரி வீட்டின் முன்போ அல்லது மந்திரிகள் வீட்டின் முன்போ யாரும் கூட முடியாது. போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். ஆனால் கெஜ்ரிவால் வீட்டின் முன் போலீசார் இல்லாததால் 1000 பஸ் ஊழியர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் திடீர் என்று கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டு விட்டார்கள். இததேபோல் பல்வேறு சமூக அமைப்பினரும் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
160 கோடி மக்கள் கொண்ட சீனாவை ஒரு மாசேதுங் மாற்றி அமைத்தார்.வலுவான
நாடாகவும் முன்னேற்ற நாடாகவும் , சுத்தமான இடமாகவும் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. இந்திய தலைவர்கள் அங்கே போனதில்லையா?
இந்தியாவில் அப்படி. ஒரு தலைவன் இன்னும் தோன்றவில்லையே என்று கவலை
பட்டோம் . விடிவெள்ளி தோன்றிவிட்டது ! டெல்லியே அதற்கு சாட்சி.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னுதாரணம் .அவர் வழிகாட்டுதல் வாழ்க !!!