தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: – காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்

Simranjith-singhதனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று  சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு,

தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள்.

நாங்கள் இலங்கையில் நடக்கும் போராட்டம் குறித்தும், தமிழ் மக்கள், பிரபாகரன் மற்றும் தனிநாடு கோரி நடக்கும் ஒருங்கிணைப்புக்களை மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்கள் இயக்கம் இந்நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறது. நீங்கள் எங்களின் இணையத்தளத்தை பார்த்தால், இலங்கை மற்றும் தமிழர்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் வெளியிடும் செய்திகளை காணலாம்.

நான் முன்னரே குறிப்பிட்டது போல இது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் மூலமாகவே இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து தம்ழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்தை நசுக்கியது. அதற்க்கு காரணம் காங்கிரஸ் கட்சி.  அது சரியோ தவறோ, தமிழ் மக்கள் தான், தமது தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றதாக நம்பியது.

அதற்காக பிரபாகரனையும் மற்ற தமிழ் மக்கள் சிலரையும் இலங்கையிலிருந்து கொண்டுவர பல வழிகளில் வேலை செய்தது. இதற்கு இலங்கை இந்தியாவுக்கு உதவ முன்வந்தாலும் பிரபாகரனும் அவரது இயக்கமும் வலிமையோடு இருந்ததால் அவரை உயிரோடு பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க முடியவில்லை.

ஆகையால் இலங்கை சதித்திட்டம் ஒன்றை தீட்டி அதன் முதல்கட்டமாக திரு கருணாநிதி, திரு சிதம்பரம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்குகிறது. இந்த தலைவர்களே தமிழக மக்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவாமல் பார்த்துக்கொண்டனர்.

உதாரணமாக திரு கருணாநிதி தன் மகளுக்கு மத்திய அரசில் ஒரு முக்கிய பதவியை பெற்றார். பின்னர் திரு ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டு அதனால் அவர்கள் பெரும் பணத்தை பெற்றனர். திரு சிதம்பரமும் பெரும் பணத்தை பெற்றார். இதனாலேயே அவர்கள் போராட்டத்தை ஒடுக்கினார்கள்.

நான் நினைக்கிறேன் தமிழக மக்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக போராட இருந்தாலும் விலைக்கு வாங்கப்பட்ட இந்த தலைவர்களால் அது முடியாமல் போனது.

மத்திய அரசில் இருந்த திரு சாஸ்திரி அவர்கள் இந்தியா முழுவதும் ஆங்கிலத்தை ஒழித்து இந்தியை திணிக்க முற்பட்ட போது தமிழகத்தில் இருந்த தமிழ் மக்கள் தான் கிளர்ந்தெழுந்து தம் உயிரையும் கொடுத்து போராடினர். அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால்தான் இந்தி பேசும் வட இந்தியர்கள் தமது இந்தி திணிக்கும் திட்டத்தை கைவிட்டனர்.

தமிழர்கள் ஒரு தனி தேசியம். அவர்கள் ஒரு தனி இனம். அவர்களுக்கென்று தனி மதம். ஆனால் இந்திய பார்ப்பனிய கட்டமைப்பில் காலம் காலமாக சாமியார்களாக இருந்து வரும் பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கென்று தனி மொழி, அவர்களுக்கென்று தனி எழுத்து வடிவம், அவர்களுக்கென்று தனி வரலாறு, அவர்களுக்கென்று தனி நாடக, இசை, கலை பள்ளிகள். வரலாற்று ரீதியாக தமது நிலத்தை தாமே ஆண்டுவந்தனர், தென் கிழக்கு ஆசியாவில் பெருமிதத்தோடு கோலோச்சி வந்தனர். தமிழ் மக்களும் சீக்கியர்களாகிய நாங்கள் போராடுவதைப் போன்றே – ஒரு சுயநிர்ணயமுள்ள தனி நாடாக பிரிந்து வரவேண்டும் என்று நம்புகிறோம்.

நாங்கள் தமிழ் இயக்கங்களை கூர்ந்து படித்து வருகிறோம். தமிழகத்திற்கு பலமுறை சென்று அங்கே கூட்டங்களில் இந்திய அரசை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறோம். இந்திய அரசு தமிழக தமிழர்களையும் பஞ்சாபிய சீக்கியர்களையும் சில இடைத்தரகர்கள் மூலமாகவே ஆட்சி செய்து வருகிறது. அந்த இடைத்தரகர்கள் இந்திய அரசோடு ஒருங்கிணைத்து தமிழர்கள் மற்றும் சீக்கியர்களின் தேசிய இன உணர்வு தேர்தல் வாக்குகளாக மாறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

பாராளுமன்றத்தில் கூட அழுத்தமாக தமிழர்கள் மற்றும் சீக்கியர்களின் உணர்வுகளை பேசுபவர்களை காண முடியாது. நான் 1999 முதல் 2004 வரை பாராளுமன்றத்தில் இருந்தபோது திரு வைகோவை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு தமிழர்களின் உணர்வுகளை பாராளுமன்றத்துக்கு கொண்டு சென்றவர்கள் வேறு யாரும் இல்லை.

நான் நினைப்பது தற்போது தேர்தல் காலகட்டமென்பதால் உங்கள் இயக்கம் தமிழ் தேசிய சிந்தனையோடு தமிழ்த் தேசிய இன விடுதலையை ஏற்கும் ஒரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். அதுவே இலங்கையில் நடந்த இனப்படுகொலை குற்றங்களை அங்கீகரிக்க உதவும்.

அர்மீனிய இனப்படுகொலையை அவர்கள் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் செனெட்டின் அங்கீகரிப்புக்கு கொண்டுவர அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆனது. அதுபோல் சீக்கிய இனபடுகொலையை சர்வதேச அரங்கில் அங்கீகரிக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் பேசக்கூடிய தனிப்பட்ட மக்களும் அதிகாரிகளும் தேவைப்படுகிறது.

தமிழர்கள் மற்றும் சீக்கியர்களின் பிரதிநிதிகள் இத்தகைய ஜனநாயக அமைப்புக்கள் என்று சொல்லப்படுபவற்றுள் வேண்டும். நீங்கள் சுய நிர்ணயத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கின்றீர்கள். நீங்கள் ஆதரிப்பது உள்ளக சுய நிர்ணயமா அல்லது விடுதலை பெற்று தனியரசாக வெளியேறும் சுய நிர்ணயமா?

நாங்கள் காலிஸ்தானை விடுதலை பெற்ற தனியரசாகவே வேண்டுமென்று விரும்புகின்றோம். அத்தகைய அரசானது இஸ்லாமிய பாகிஸ்தானுக்கும், கொம்யுனிச சீனாவுக்கும், இந்து அரசான ஐக்கிய இந்தியாவுக்கும் ஒரு இடையகமாக இருந்து தெற்காசியாவின் அமைதிக்கு உதவும்.

ஏனெனில் இம்மூன்று நாடுகளும் தீவிர பகை நாடுகள். மேலும் அணு ஆயுதங்கள் தம்மிடம் கொண்ட நாடுகள். அணு ஆயுத போர் மூளும் அச்சத்தில் அவர்களின் போர் களமாக இருக்கப்போவது சீக்கியர்களின் பகுதிகளான ராஜ்ஸ்தான், பஞ்சாப், ஹரியானா சண்டிகர், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமார்ச்சல் பிரதேசம். ஆகையினால் ஒரு இடையகமான (buffer ) அரசு உருவாக்கப்பட்டால் சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். அத்தோடு மட்டுமின்றி தெற்காசியாவின் அமைதி பேணப்படும். ஆகையினால் நாங்கள் விடுதலை பெற்ற சுய நிர்ணய தனி அரசையே ஆதரிக்கிறோம்

தமிழ் ஈழம் குறித்து உங்களின் ஆலோசனை என்ன. ஒன்றுபட்ட இலங்கையில் இருப்பதை ஏற்கிறீர்களா அல்லது விடுதலை பெற்ற தனி அரசாக வருவதை ஏற்கிறீர்களா. இதில் உங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள்.

ஒரு இனப்படுகொலை குற்றம் நடந்தேறிய பின்னர் அவர்கள் இலங்கைக்குள் ஒருங்கிணைந்து வாழ்வது இயலாத ஒன்று. வரலாற்று ரீதியாக தமிழர்கள் பட்ட காயங்கள் மிகவும் ஆழமானவை என்பதால் நல்லிணக்கம் என்பது என்றும் முடியாது. தமிழர்களுக்கான தனி நாடு உருவாக வேண்டும்.

ஐயா இது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐநா மற்றும் இந்தியா போன்றவை ஒருங்கிணைந்த இலங்கை என்று கூறி வருகின்றன. பெரும்பாலான மக்களும் உள்ளக சுயநிர்ணயம் என்றும் வெளியக ( தனியரசு / தனி நாடு ) சுய நிர்ணயம் என்றும் குழப்பமாக இருக்கிறார்கள். இதற்கான தீர்வாக நீங்கள் முன்னிறுத்துவது என்பது ஒன்றுபட்ட இலங்கையா தனி தமிழ் ஈழ நாடா?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழ்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத தீர்வாக இருக்கும். ஏனென்றால் தமிழர்கள் மீது கொடூரமான இனப்படுகொலை குற்றம் நடந்தேறியுள்ளது. இதற்க்கு பின்னால் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எப்படி இரண்டாம் உலகப்போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் யூதர்களால் ஜேர்மனியோடு இணைந்து வாழ்வது என்பது இயலாத ஒன்றோ அதுபோலத்தான் தமிழர்களுக்கும். இவ்வளவு பெரிய குற்றம் நடந்தேறிய பின்னர் தமிழர்கள் தனி நாடாக உருவாவதே சரியானது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இதற்கு துணை நிற்க வேண்டும். இதற்க்கு இந்தியாவும் உதவ வேண்டும்.

தனி தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்கிறீர்கள். பதிமூன்றாவது சட்ட திருத்தம் பற்றிய உங்கள் கருத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா.

13வது சட்டத்திருத்தம் முழுமையான விடுதலை மற்றும் சுய நிர்ணயம் பற்றி பேசவில்லை. அது உள்நாட்டில் ஒப்பந்தங்கள், தன் உரிமைகள் என்றுதான் பேசுகிறது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இலங்கையில் தமிழர்கள் விடுதலை பெறவேண்டும். இவ்வளவு நடந்த பின்னர் அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும்.

ஐயா இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதன்மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா. அது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமா?

இல்லை. அதனால் பிரச்சினைகள் தீராது. தமிழர்களின் காயங்கள், ஒடுக்குமுறை, இனப்படுகொலை குற்றங்கள் மிகவும் கடுமையானவை. விடுதலை மற்றும் சுயநிர்ணயத்திற்கு குறைவான எதையும் இலங்கையில் வாழும் தமிழினம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

எப்படி தேர்தல் மற்றும் தன்னுரிமை போன்றவற்றை சீக்கிய இனப்படுகொலைக்கு பின்னர் சீக்கியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ அது போன்றுதான். ஒரு அரசு இனப்படுகொலை குற்றம் நிகழ்த்திய பின்னர் நல்லிணக்கம் என்ற பேச்சே இல்லை. தற்போது நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் நிர்வாகிகளாகவும் முதல்வர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் இலங்கையோடு ஒருங்கிணைந்து செயல்படுபவர்களே.

ஐயா நீங்கள் ஈழத்தமிழர்களுக்கும் சீக்கியர்களுக்குமான தீர்வென்பது தனிநாடாக விடுதலை பெறுவது தான் என்று உறுதிபட கூறுகின்றீர்கள். ஆனால் இதனை தேர்தல் மூலமாக முன்னெடுக்க சொல்கின்றீர்கள். இது ஒன்றுக்கொன்று முரணாக தெரிகிறதே. தேர்தல் வழியாக சென்றால் அது அந்நாட்டின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடுமே. ஆனால் தாங்கள் சுய நிர்ணயம் பற்றி பேசுகின்றீர்கள். இதை கொஞ்சம் விளக்க முடியுமா.

நான் தேர்தல் என்று சொன்னதற்கு காரணம் அதுவே அமைதியான வழியில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழி. மற்ற வழிகள் தற்கால நடைமுறைக்கு ஒத்துவராதவை. ஏனெனில் அரசு தன் அசுர பலத்தால் அவற்றை ஒடுக்கிவிடும். ஜனநாயக வழியே நமக்கு சட்ட ரீதியாக அங்கீகாரத்தை தரும்.

பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாம் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை உலகம் ஏற்றுகொள்ள வாய்ப்பிருக்கும். ஆனால் நீங்கள் வேறு வழிகளில் விடுதலையை முன்னெடுத்தால் உலகின் நிலைப்பாடு உங்களுக்கு எதிராகவே நிற்கும். நீங்கள் யாரிடமிருந்து விடுதலை பெற முயல்கிறீர்களோ அவர்கள் மட்டுமின்றி உலகில் இயங்கும் மற்ற பல சக்திகளாலும் சேர்த்து ஒடுக்கப்படுவீர்கள்.

ஒருகாலத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மிக சிறப்பாக இருந்தது. விட்ரோ வில்சன் சுய நிர்ணய உரிமையை விரும்பினார். அவர் முதலாம் உலகப் போருக்கு பின்னர் வரையறுக்கப்பட்ட தேசிய கொள்கைகளின் அடிப்படையில் தேசங்களை கட்டமைத்தார். ஆனால் இன்றைய அமெரிக்காவிற்கு மனித உரிமைகளில் நம்பிக்கை இல்லை, சுய நிர்ணய உரிமையில் நம்பிக்கை இல்லை.

மக்களின் உரிமைகளே தங்களின் முடிவுகளை நிர்ணயிக்கும். தற்காலத்திலோ அல்லது ஆங்கிலேயர் காலத்திலோ, இந்துக்கள் காங்கிரஸ் மூலமாக விடுதலை பெற்றனர், இஸ்லாமியர்கள் முஸ்லிம் லீக் மூலமாக பாகிஸ்தான் விடுதலையை பெற்றனர். தேர்தலில் போட்டியிட்டு அதன் மூலமாகவே தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

நம் துணைக்கண்டத்தின் வரலாற்றை பார்க்கும்போது தேர்தல் மூலமாகவே மக்கள் தங்களின் குரலை வெளிப்படுத்தி. அதுவே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு உலகின் மற்ற நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

ஐயா, இந்திய அரசு தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தரும் என்று நினைக்கிறீர்களா ? அவர்கள் தேசிய இன போராட்டங்களை ஏற்றுகொள்வார்களா ? அவர்கள் இதற்காக தங்களின் கொள்கையை மாற்றம் செய்வார்களா?

இந்தியாவின் இந்துத்துவ அரசு விடுதலை இயக்கங்களுக்கு உதவ அஞ்சுகிறது ஏனெனில் அது நாகர்களோடும், காஷ்மீரியர்களோடும், மிசோராமியர்களோடும், தமிழர்களோடும் சீக்கியர்களோடும் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்திய இந்துத்துவ அரசை பார்த்தால் தெரியும்.

அது ஒவ்வொரு மாநிலங்களையும் இராணுவத்தின் மூலமாகவும் கடுமையான சட்டங்களின் மூலமாகவுமே ஆட்சி செய்கிறது. இந்த சட்டங்கள் ராணுவத்திற்கும் காவல்துறை சக்திகளுக்கும் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து தப்பித்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ஆகையால் இந்திய இந்துத்துவ ஆளும் வர்க்கம் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு உதவும் என்று நான் நினைக்கவில்லை.

ஐயா கடைசியாக ஒரு கேள்வி!

உங்களின் தேசிய இனமும் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளது. ஐநா போன்ற சர்வதேச அமைப்புக்கள் இதில் எப்படி நடந்துகொண்டார்கள். உங்களுக்கு உண்மையில் ஆதரவாக இருந்தார்களா? இந்திய ஊடகங்கள் எப்படி நடந்துகொண்டன? சீக்கிய இனப்படுகொலைக்காக ஐநாவின் நடவடிக்கைகள் உங்களுக்கு உண்மையில் திருப்திகரமாக இருந்ததா?

ஐநாவின் நடவடிக்கைகள் விடுதலை இயக்கங்களுக்கு உதவுவதாக நான் நினைக்கவில்லை. காகிதத்தில் சுய நிர்ணய உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு என்றெல்லாம் பேசினாலும் நடைமுறையில் இத்தகைய குற்றங்களை இழைப்பவர்களின் பக்கமே நின்று வந்துள்ளது. தற்போது ஐநா ஒடுக்கும் அரசின் பக்கமே நிற்கிறது.

TAGS: