அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு குறைந்த ஊதியம்

cooking_001இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ள குழு, இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சட்டத்துறை, நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ளது.

விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் ஒன்றாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த தகவல்களை வழங்காமல், அமெரிக்க அரசு காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியாவைச் சேர்ந்த ஒட்டுநர்கள், சமையல் கலைஞர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சட்டப்படி, ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 9.47 டாலர்கள் (ரூ.586) வழங்க வேண்டும். ஆனால் இந்திய ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை (200 முதல் 250 டாலர்கள்) மட்டும் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தூதரக வளாகத்தினுள் இருக்கும் முடி திருத்தகம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களை அங்குள்ள அதிகாரிகளே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் அல்லாதோரும் அதனை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இதன்மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விதிகளை மீறியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு சட்டங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீறியிருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

TAGS: