தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிப்பு: இலங்கையுடன் மத்திய அரசு பேச வலியுறுத்தல்!

manmokansingh1தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது தமிழக அரசியல் கட்சிகளிடையே கவலையையும், மீனவர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுமுகத் தீர்வு காணவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 2 நாள்களில் மட்டும் 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 18 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே சனிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று இலங்கைச் சிறையில் அடைத்துள்ளனர்.

ஏற்கெனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 226 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இலங்கையுடன் இந்திய அரசு பேச வேண்டும்.

இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பாம்பன் மீனவர்கள் கதி என்ன?:

பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்று, காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் திங்கள்கிழமை மாலை வரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாததால், மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே கச்சத்தீவு அருகே சனிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேரை ஜன. 10-ம் தேதி வரை காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொந்தளிப்பு:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட 18 மீனவர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை மாலை ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டனர்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறிச் செயல்படுவதால் தமிழக மீனவக் குடியிருப்பு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

மார்க்சிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்:

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு:

இந்நிலையில் கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி (காங்கிரஸ்) மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது நேசக்கரங்கள் அறக்கட்டளைத் தலைவர் பாம்பன் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ, சின்ன ஏர்வாடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் குணசேகரன், நாகப்பட்டினம் மீனவர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெயபால், பாம்பன் தீவு மீனவர்கள் சங்கப் பிரதிநிதி அருள் ரிச்சர்ட், ராமேசுவரம் மீனவர்கள் சங்கச் செயலாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி,

இலங்கைச் சிறையில் வாடும் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 280 மீனவர்களை விடுவிக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 72 படகுகளையும் வலைகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினோம்.

இதையடுத்து இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் இலங்கை தரப்புடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் குறிப்பிட்டார் என்றார்.

TAGS: