டில்லியில் இலவச நீர் விநியோகம் வெற்றி பெறுமா?

arvind_kejriwal_oathடில்லிவாழ் மக்களுக்கு நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சாத்தியமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அங்கு சிறுபான்மை அரசுக்கு தலமையேற்றுள்ள அரவிந்த் கேஜரிவால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறிவித்த முதல் கொள்கை முடிவில் டில்லி மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

ஆனால் டில்லியில் நீராதாரங்கள் பெரிய அளவில் இல்லாத சூழலில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் வெற்றி அண்டை மாநிலங்களின் ஆதரவை நம்பியே உள்ளது என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார் சென்னையிலுள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் நீரியில்துறையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன்.

இலவசமாக இந்த அளவுக்கு நீரை வழங்குவதைவிட, குறைந்த செலவில் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை அறிவித்திருந்தால் அது வெற்றிபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக கொடுக்கப்படும்போது, அது கழிவு நீர் மேம்பாடு உட்பட பல உள்கட்டுமான வசதிகள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் டாக்டர்.பரசுராமன் வாதிடுகிறார்.

கழிவுநீர் மறுசுழற்ச்சி செய்யப்படுமா என்பது போன்ற விஷயங்கள் தெளிவில்லாமல் உள்ளது எனவும் அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. -BBC

TAGS: