3600 கோடி ரூபா ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா

helicopter_001முக்கிய பிரமுகவர்களுக்காக 12 நவீன சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க, ஆங்கில இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

லஞ்சப் புகாரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 360 ரூபா கோடி லஞ்சம் தரப்பட்டதாக கடந்த 2010-ம் ஆண்டு புகார் எழுந்தது.

லஞ்சம் தந்தது தொடர்பாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணை இத்தாலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

ஒப்பந்தத்தின்படி மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை இந்தியா கொள்முதல் செய்யவிருந்தது. அதில் 3 ஹெலிகாப்டர்களை அந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் 30 சதவீதத்தை இந்தியா வழங்கிவிட்டது.

இந்நிலையில், லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஒப்பந்தத்தை முடக்கிவைப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா அறிவித்தது.

பின்னர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனம் அளித்த பதிலை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் வைத்திருந்த ஆவணத்தை ஆராய்ந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதியது.

இதற்கிடையே இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், சர்வதேச மத்தியஸ்தர் குழுவை நாடியது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுத்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

TAGS: