கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்கிற செய்தி வெளிவந்ததுமுதலே பிரதமர் பதவி விலகக்கூடும் என்கிற வதந்தி பரவலாகவே தலைநகரப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முடிந்தவரை தவிர்க்கும் பிரதமர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்பதுதான் அதற்கு காரணம்.
ஏனைய பிரதமர்களைப் போல பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு முன்போ பின்போ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பிரதமர் மன்மோகன் சிங் 2004-இல் பதவியேற்றுக்கொண்ட பின் 2006-இல்தான் முதல்முறையாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது ஆட்சியில் நடந்த முதலும் கடைசியுமான பிரதமரின் ஒரேயொரு பத்திரிகையாளர் சந்திப்பு அதுதான்.
2009-இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற டாக்டர் மன்மோகன் சிங் 2010 மே மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதற்குப் பிறகு தில்லியில் அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பது இப்போதுதான். இதற்கிடையில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிப்பது எல்லாமே வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விமானத்தில் தன்னுடன் அழைத்துச் செல்லும் பத்திரிகையாளர்களிடம் மட்டும்தான்.
கடந்த மூன்று மாதங்களாகவே பிரதமர் மாறப் போகிறார் என்றும் ராகுல் காந்தி பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அவ்வப்போது வதந்திகள் கிளம்பி அடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி விரைவிலேயே காங்கிரஸின் பிரதமர் பதவி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியதிலிருந்து இந்த வதந்தி மேலும் வலுப்பெற்றது. நிதியமைச்சர் சிதம்பரம் உள்பட சில மூத்த அமைச்சர்களே பிரதமர் பதவி வேட்பாளரின் பெயரை அறிவித்தாக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாத காலமாகவே கட்சித் தலைமைக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, பிரதமரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் இருவரையும் கட்சித் தலைமை பதவி விலக வற்புறுத்தியதிலிருந்தே சோனியா காந்தி – மன்மோகன் சிங் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு மாதத்திற்கு முன்பே சோனியா காந்தி தரப்பிலிருந்து பிரதமருக்கு அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்பதற்கான சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மன்மோகன் சிங்கோ தனது பதவிக் காலம் முடியாமல் விலகும் எண்ணம் இல்லை என்பதை சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் சூசகமாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசுத் தரப்பிலிருந்து பிரதமர் ராஜிநாமா செய்யப்போகிறார் என்கிற வதந்தியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி முற்றிலுமாக மறுக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவிக்காலத்தை முழுமை செய்வார் என்று உறுதி கூறினார் அவர்.
பிரதமர் திடீரெனப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று பிரதமர் அலுவலகத்தில் விசாரித்ததிலிருந்து தெரிய வருகிறது. முதலாவது காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகளும், வளர்ச்சித் திட்டங்களும் முறையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்கிற கருத்து காங்கிரஸார் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம், பிரதமர் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்காததும் அரசின் செயல்பாடுகளை விளக்காததும்தான் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் தலைநகர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது. இந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அதை நிவர்த்தி செய்யலாம் என்பதுதான் அந்த முதல் காரணம்.
இரண்டாவதாக, பிரதமர் மன்மோகன் சிங் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதுடன் அப்படியே காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி கோரப் போவதில்லை. அதனால் கடந்த பத்து ஆண்டுகளாக தனது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்காக நன்றி கூறும் விதத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் ராஜிநாமா செய்வதில் வேறு பல சிக்கல்களும் இருக்கின்றன என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எடுத்துக் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகினால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அடுத்தபடியாக அவர் முன்னால் இரண்டு மாற்று வழிகள் இருக்கின்றன. ஒன்று, காங்கிரஸ் கட்சியையே இன்னொரு தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதித்து அவரைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது. மற்றொன்று, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருப்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மன்மோகன் சிங்கையே காபந்து பிரதமராக அடுத்த தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை தொடர அனுமதிப்பது.
1990இல் வி.பி. சிங் பதவி விலகியபோது 9-ஆவது மக்களவை கூட்டப்பட்டு ஒரு வருடமே ஆகி இருந்ததால் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் மாற்று அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சந்திரசேகரை பிரதமராக்கினார். அதேபோல, 1997இல் தேவகெளட அரசு கவிழ்ந்தபோது 11ஆவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டே ஆகியிருந்ததால் ஐ.கே. குஜ்ரால் தலைமையில் மாற்று அரசு அமைக்க அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா வழிகோலினார். இப்போது நிலைமை அப்படியல்ல. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் இன்னொரு பிரதமரை ஒரு சில மாதங்களுக்காக பதவியில் அமர்த்த குடியரசுத் தலைவர் முன்வருவாரா என்பது கேள்விக்குறி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முழுமையான அரசாக ஆட்சியில் தொடராமல் காபந்து அரசின் தலைமையில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது காங்கிரஸýக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்.
அடுத்த ஐந்து மாதங்களுக்கு எந்தவிதமான அரசியல் முடிவுகளையும் எடுக்க முடியாத சூழலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தள்ளப்படும். அப்படியொரு நிலைமை ஏற்படுவதை காங்கிரஸ் தலைமை எதிர்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.
பிரதமர் நாளை நடக்க இருக்கும் பத்திரிகையாளர் கூட்டத்தில் தனது தலைமையிலான அரசின் கடந்த ஐந்து ஆண்டுக்கால சாதனைகளை விளக்கப் போகிறாரா, அவர்களது ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கப் போகிறாரா அல்லது தனது ராஜிநாமா முடிவை அறிவிக்கப் போகிறாரா என்பதை அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
காங்கிரசை இனி எவனும் காப்பாற்ற முடியாது……
காங்கிரஸ் தோற்றம் 1936,மறைவு 2014
ராஜீனமாவாக குஉட இருக்கலாம்? யார் கண்டது , நல்ல பிரதமர்
பொம்மை தலையாடிக்கு 2 தவனை பிரதமர் பதவியே பெரிய சாதனைதான் .
ரோட்டி சுட்டு சாப்பிட போகிறார் இந்த கொண்ட வங்காளி