திருமண வயது: பாமக கோரிக்கைக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

marriage21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக மத்திய அரசுக்கு கோரிக்கை.

வியாழனன்று சென்னையில் நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்துகொண்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துச் செய்யத் தகுந்தவை என்று அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் பரிந்துரைந்திருந்ததாக தெரிவித்திருக்கும் பாமக பொதுக்குழுவின் தீர்மானம், அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.

பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் நடக்கும் காதல் திருமணங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைவதாகவும், காதல் செய்யும் பெண்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்வுப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுப்பது தான் இதற்கு காரணம் என்றும் கூறும் பாமகவின் தீர்மானம், “ஒரு பெண்ணின் காதல் திருமணம் தோல்வியடையும் பட்சத்தில் அப்பெண்ணும், அவரது பெற்றோரும் தான் வாழ்க்கை முழுவதும் துயரப்படவேண்டும். திருமணத்திற்கு பிறகுதான் தாங்கள் அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டு, பின்னர் வருந்தும் தவறை செய்துவிட்டோம் என்பதை உணர்கிறார்கள். ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்” என்றும் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு ஏற்ற மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதிலும் தங்களின் மகள் மகிழ்ச்சியான மணவாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சட்டப்படி விதிக்க வேண்டும் என்றும் பாமகவின் பொதுக்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணிய அமைப்புக்கள் எதிர்ப்பு

இந்த தீர்மானம் பெண்களுக்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது என்று விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திதிய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், அதிகரித்துவரும் ஜாதி மறுப்பு திருமணங்களை தடுத்து, ஒரே ஜாதிக்குள் பெண்களை பலவந்தமாக திருமணம் செய்விக்கும் பழமைவாத செயலுக்கு இந்த தீர்மானம் வக்காலத்து வாங்குவதாக கூறினார்.

21 வயது வரம்பு என்பதை பெண்களுக்கு மட்டும் விதிக்கும் பாமகவின் போக்கு அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதுடன், தற்போது நிலவும் கள யதார்த்த நிலவரத்தையும் அது புறந்தள்ளுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்களில் பெண்களின் வயது பதினெட்டுக்கும் குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக கூறிய சுதா சுந்தரராமன், இப்படியான இளவயது திருமணங்களை தடுக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகள் போராடிக்கொண்டிருக்கும்போது பெற்றோர் சம்மதத்துடனே பெண்களின் திருமணம் நடக்கவேண்டும் என்று பாமக கோருவது, பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை பறிக்கும் செயல் என்கிறார் அவர். -BBC

TAGS: