பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

e-r-easwaranஇன்னொரு முறை தமிழக மீனவர்களைத் தொட்டால் பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு உடனே எச்சரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் காட்டிய மெத்தனத்தைப் போல், இந்தியத் தமிழர்கள் பிரச்சினையிலும் கண்டு கொள்ளாத போக்கை மத்திய அரசு கடைபிடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பதும் அதற்கு தமிழ் அமைப்புகளும், தமிழக அரசும் குரல் கொடுப்பதும் தொடர்கதையாகிப் போனது.

அமெரிக்காவைக் கூட பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் இந்திய அரசு இலங்கைக்கு அடங்கிப் போவது ஏன் என்ற கேள்வி அனைத்து தமிழர் மனதிலும் எழுகிறது.

தமிழக மீனவர்களை காக்க வேண்டுமென்று இந்திய அரசிடம் முறையிடாமல் வேறு யாரிடம் முறையிட முடியும்.

மத்திய அமைச்சர்களும் பிரதமரும் மீனவர்களை மீட்க முயற்சிகள் நடக்கிறது என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பது மத்திய அரசின் மீது நமக்கிருக்கிற நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

தமிழகத்தின் பிரதானக் கட்சிகளும், தமிழக முதல்வரும் அறிக்கை விடுவதோடும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடும் கடமை முடிந்ததாக எண்ணக் கூடாது.

தமிழகத்தின் அனைத்துக் கட்சி கூட்டாக டில்லியில் போராட்டத்தை நடத்துவோம்.

தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும். இனியும் இதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் தான் என்ற எண்ணம் இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னொரு முறை தமிழக மீனவர்களைத் தொட்டால் பொறுமை காக்க மாட்டோம் என்று இலங்கை அரசை மத்திய அரசு உடனே எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TAGS: