ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் மூலம் இந்த ராக்கெட் ஏவப்பட்டதால் இது இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
இருபது ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு இந்திய விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வசப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் ஏவுவதில் இருந்த தடையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தகர்த்துள்ளனர்.
இந்த ராக்கெட் சுமந்து சென்ற 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.இதையடுத்து, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ், சீனா நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இது இந்திய விண்வெளியில் மிக முக்கியமான நாள் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்தியா இதுவரை செலுத்தியுள்ள 8 ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட்டுகளில் 5 ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். அதோடு, சந்திரயாண்-2 திட்டம், விண்வெளி மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டங்கள் ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் வெற்றி பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சீறிப் பாய்ந்த ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து சரியாக மாலை 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
மொத்தம் 49 மீட்டர் உயரமும், 415 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் பூமி அதிரும் பெரிய ஓசையுடன் மேலே சென்றது.
மிக முக்கியமான மூன்றாவது நிலையான கிரையோஜெனிக் நிலை 4 நிமிடங்கள் 55 விநாடிகளில் எரியத் தொடங்கியதும் விஞ்ஞானிகள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டனர். இந்த கிரையோஜெனிக் என்ஜின் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 12 நிமிடங்கள் இயங்கின. மொத்தம் 17 நிமிடங்களில், 1982 கிலோ எடைகொண்ட ஜிசாட்-14 செயற்கைக்கோளை புவிச்சுற்றுவட்ட மாற்றுப்பாதையில் ராக்கெட் நிலைநிறுத்தியது. பூமியிலிருந்து அதிகபட்சம் 35,950 கிலோமீட்டரும், குறைந்தபட்சம் 180 கிலோமீட்டரும் தொலைவு கொண்ட இது தாற்காலிக பாதை ஆகும்.
செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கிய பிறகு, அதிலுள்ள மோட்டார் இயக்கப்பட்டு இன்சாட் -3சி, இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோள்கள் மற்றும் கல்பனா-1 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்களுக்கு அருகில் ஜிசாட்-14 செயற்கைக்கோள் கொண்டுசெல்லப்பட உள்ளது.
விஞ்ஞானிகள் மகழ்ச்சி: கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக இயங்கியதையடுத்து, விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தடைகளை வென்ற விஞ்ஞானிகள்: கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தொழில்நுட்பத்தைப் பெற இந்தியா முயற்சி செய்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்பதால் இந்தியா இந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் தடையிருந்தது. 1998-ல் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தடை விதித்தது.
இந்த நிலையில், ரஷியாவிடமிருந்து முன்னதாகவே பெற்ற 7 கிரையோஜெனிக் இயந்திரங்களின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இஸ்ரோ செலுத்தி வந்தது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் 2010, ஏப்ரல் 15-ம் தேதி தோல்வியடைந்தது. இப்போது இரண்டாவது முறையாக செலுத்திய கிரையோஜெனிக் என்ஜின் வெற்றி பெற்றுள்ளது.
12 ஆண்டுகள் ஆயுள்: ஏற்கெனவே பூமியைச் சுற்றிவரும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களின் சேவையை மேம்படுத்த இந்த ராக்கெட்டுடன் அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-14 செயற்கைக்கோள் பயன்படும். இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும்.
கிரையோஜெனிக் என்ஜின்: கிரையோஜெனிக் என்ஜினில் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். குறைந்த அளவிலான எரிபொருள் மிக அதிகமான உந்து சக்தியை வழங்கும் என்பதால் இந்த என்ஜின் மூலம் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
அதேநேரத்தில், கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. ஏனென்றால் மிகக் குறைந்த வெப்பநிலையிலான எரிபொருள் இதில் பயன்படுத்தப்படுகிறது.
மைனஸ் 183 டிகிரியில் ஆக்சிஜனும், மைனஸ் 253 டிகிரியில் ஹைட்ரஜனும் திரவ நிலைக்கு வரும். இந்த அளவுக்கு வெப்பநிலை குறைவான நிலையில் உள்ள எரிபொருளைக் கொண்டு என்ஜின் இயக்கப்பட வேண்டும்.
20 ஆண்டு உழைப்பு
இந்தியாவின் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான நாள் ஆகும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் 20 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. முதல் முயற்சி தோல்வியடைந்ததும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் இந்தத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை நமது விஞ்ஞானிகள் செய்தனர்.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, இந்த வெற்றியைப் பெற்றது விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம் என்பதைக் கூறுகிறது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் யு.ஆர். ராவ் இந்தத் திட்டத்துக்கான பாதையை அமைத்தார். அவர் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி.
இந்த வெற்றியின் மூலம் இந்த நாட்டுக்கு நாங்கள் பட்ட கடனை திருப்பிச் செலுத்தியுள்ளதாக கருதுகிறோம் என்றார் அவர்.
இதுவரை….
1. ஜி.எஸ்.எல்.வி.-டி1 – ஜிசாட்-1 – ஏப்ரல் 18, 2001 – வெற்றி
2. ஜி.எஸ்.எல்.வி.-டி2 – ஜிசாட்-2 – மே 8, 2003 – வெற்றி
3. ஜி.எஸ்.எல்.வி.-எஃப்01 – எஜுசாட் (ஜிசாட்-3) – செப்டம்பர் 20, 2004 – வெற்றி
4. ஜி.எஸ்.எல்.வி.-எஃப்02 – இன்சாட்-4சி – ஜூலை 10, 2006 – தோல்வி
5. ஜி.எஸ்.எல்.வி.- எஃப்04- இன்சாட் -4சிஆர் – செப்டம்பர் 2, 2007 – வெற்றி
6. ஜி.எஸ்.எல்.வி.-டி3 – ஜிசாட்-4 – ஏப்ரல் 15, 2010 – தோல்வி
7. ஜி.எஸ்.எல்.வி.-எஃப்06 – ஜிசாட்-5பி – டிசம்பர் 25, 2010 – தோல்வி
8. ஜி.எஸ்.எல்.வி.-டி5 – ஜிசாட்-14 – ஜனவரி 5, 2014 – வெற்றி