வரும் மக்களவைத் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இத் தகவலை அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல், தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த யோகேந்திர யாதவ் கூறியது:
முதல் நாள் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 545 தொகுதிகளில் போட்டியிடாவிட்டாலும், கட்சிக்கு செல்வாக்குள்ள சுமார் 20 மாநிலங்களில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவோம். ஹரியாணா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவுள்ளது. ஆனால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகள், மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் தில்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடக் கூட்டத்தில் கூதீர்மானிக்கப்பட்டது.
வேட்பாளர் பட்டியல்: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜனவரி 10-ஆம் தேதியும், இரண்டாவது பட்டியல் பிப்ரவரி 15-ஆம் தேதியும் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.
மக்களவைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் எதிர்கொள்வோம். இத் தேர்தலுக்கு நிறைய நாள்கள் உள்ளதால் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை.
உறுப்பினர் சேர்ப்பு: ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து, கிராம, நகர்ப்புறங்களிலிருந்து ஏராளமானோர் தொடர்பு கொண்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, “நான் கூட ஆம் ஆத்மி’ என்ற சிறப்பு உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தேசிய அளவில் ஜனவரி 10 முதல் 26-ஆம் தேதி வரை நடத்தவுள்ளோம்.
ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்கான உறுப்பினர் கட்டணமான ரூ.10 இனி வசூலிக்கப்படமாட்டாது.
தேர்தல் அறிக்கை: மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தேர்தல் நிதி வசூலிக்கவும் சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா, யோகேந்திர யாதவ் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமாலும் எங்கள் கட்சியின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்களை மாநிலங்கள் அளவில் அமைக்கப்பட்டுள்ள சீராய்வுக் குழு ஆய்வு செய்யும். இதைத் தொடர்ந்து, அப் பட்டியல் குறித்து அரசியல் ஆலோசனைக் குழு இறுதி முடிவு எடுக்கும்.
கட்சியின் கொள்கைகளை வகுப்பதற்கு கடந்த ஓராண்டில் 31 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுக்களில் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்னைகளின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தில்லியைப் போல தேசிய அளவில் தேர்தல் அறிக்கையும், தொகுதி அளவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்றார் யோகேந்திர யாதவ்.
பேட்டியின் போது கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோபால் ராய் உடனிருந்தார்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில், பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம்.
இதில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
களம் காணும் முக்கியப் பிரமுகர்கள்
மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் மகாராஷ்டிரத்தில் மயாங் காந்தி, உத்தர பிரதேசத்தில் சஞ்சய் சிங் ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியாணா மாநிலத்துக்கு யோகேந்திர யாதவ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இவர் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கேப்டன் கோபிநாத், “ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ முன்னாள் தலைவர் மீரா சன்யால், இன்ஃபோஸிஸ் வி. பாலகிருஷ்ணன், பாடகர் ரொமோ ஃபெர்ணான்ட்ஸ் உள்ளிட்டோர் அண்மையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர்.