ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை : கெஜ்ரிவால்

kejriwalபுதுடெல்லி: ‘‘ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அதன்பின் அவர் அளித்த பேட்டி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ கட்சியின் ஹர்ஸ் வர்தன் கூறியுள்ளார். ஆதாரத்தை தந்தால் நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியுள்ளேன். ஊழல் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை.

ஷீலா தீட்சித், அமைச்சர்கள், அதிகாரிகள், பா.ஜ, காங்கிரஸ் கட்சியினர், எனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் விட மாட்டோம். மாநில லஞ்ச ஒழிப்புத்துறையை சரிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.  நேர்மையான அதிகாரிகளை அடையாளம் கண்டு வருகிறோம். ஊழல் தொடர்பான புகார்களை பெற தனி போன் வசதி தொடங்கப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

20 மாநிலங்களில் போட்டியிட திட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘‘வரும் மக்களவை தேர்தலில் 15 முதல் 20 மாநிலங்களில் எங்கள் கட்சி போட்டியிடும். நல்ல வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். அரியானா சட்டசபை தேர்தலிலும் ஆம்ஆத்மி போட்டியிடும். புதிய உறுப்பினர்களை சேர்க்க 10ம் தேதி முதல்  15 நாள் பிரசாரம் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

TAGS: