டில்லியில் ஆம் ஆத்மி படு சுறு, சுறு ; ஒரே நாளில் 800 பேர் இடமாற்றம்

arvபுதுடில்லி: டில்லியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் படு வேகமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க கடுமையாக பாடுபடுவேன் என உறுதியுடன் களம் இறங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக குடிநீர் விநியோக துறையில் ஒரே நாளில் 800 ஊழியர்களை இட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த துறைக்கான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி, பொறுப்பேற்ற சில நாட்களில் மக்களுக்கு வரியில்லா குடி நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மின்சார கட்டணம் பாதியாக குறைப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை செயல்படுத்த சட்ட ரீதியிலான சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 800 பேர் அதிரடியாக ஒரே நாளில் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துறை அதிகாரிகள் 3 பேர் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்குவர் என தெரிகிறது. குடி நீர் விநியோகம் முறையாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காத்தான் ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த துறை ஊழியர்கள் கடந்த 3 ஆண்டு காலமாக இட மாற்றம் இல்லாமல் பணியாற்றி வந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறப்பு தொலைபேசி: இதற்கிடையில் ஊழல் புகார்களை பதிவு செய்ய சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த எண் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

TAGS: