ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண முயற்சிகள் எடுப்பாரா முதல்வர் ஜெயலலிதா?- பழ. நெடுமாறன்

nedumaarannதமிழக முதலமைச்சர் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரையும், கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அழைத்து, இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் செய்வது நல்லது. இவ்வாறு உலகத் தமிழர் இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடும் இலங்கையில் உள்ள தமிழீழமும் ஒரே நாடாக இருந்தது இல்லை. மொழி, பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் இரு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கிடையே ஆழமான நெருங்கிய உறவு பல நூறாண்டு காலமாக நிலவி வருகிறது. அந்த அடிப்படையில் இதனை அணுக வேண்டும்.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை அரசு கூறும் தகவல்கள் உண்மையானவையா, இல்லையா என்பது பற்றி வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்களை அழைத்துப் பேசி, முழுமையான உண்மைகளை தமிழக முதலமைச்சர் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கிணங்க இந்திய அரசுடன் பேசி ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணுமாறு வற்புறுத்த முடியும்.

தமிழக சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து அடுக்கடுக்கானத் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலமோ அல்லது, பிரதமருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுவதன் மூலமோ பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண முடியாது.

மாறாக… வடக்கு, கிழக்கு மாகாண முதல்வர்களை அழைத்துப் பேசி முழு உண்மைகளையும் அறிந்துகொண்டு, அதற்காக மத்திய அரசுடன் இன்னும் வலுவுடன் போராட முடியும்.

அதைச் செய்வதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

இல்லையென்றால், அவர் இந்தப் பிரச்சினையில் ஒப்புக்காக சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார், பிரதமருக்குக் கடிதம் அனுப்புகிறார் என மக்கள் கருதுவார்கள்.

முயற்சிகள் எடுப்பாரா முதல்வர்?

TAGS: