பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் தொடுத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய இராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ தின ஆண்டு விழாவையொட்டி, இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு எந்த பதிலடியும் கொடுக்கவில்லையே? என்று, அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விக்ரம்சிங்,
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் தொடுத்தால் அதற்கு சமமான அளவில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும், பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 10 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
உரிய பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பற்றி என்னால் உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரியும், 9 வீரர்களும் கொல்லப்பட்டது மற்றும் 12 அல்லது 13 வீரர்கள் காயம் அடைந்தது பற்றி ஜியோ டி.வி. கடந்த டிசம்பர் 23ம் திகதியன்று வெளியிட்ட தகவலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் போர் நிறுத்த விதிகள் மீறப்படும் சமயத்தில் எல்லாம் சம்பந்தப்பட்ட அந்த பகுதி சிறிய போர்க்களம் போலவே காட்சியளிக்கும். தேவையான பதிலடி தாக்குதலில் நமது வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். போர் நிறுத்த விதிகளை நமது அண்டை நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் கடைப்பிடித்தால் நாங்களும் கடைப்பிடிப்போம். அவர்கள் விதிகளை மீறினால், நாங்களும் மீறுவோம்.
அதே நேரத்தில், இந்த தாக்குதல் அதே பகுதியில் அவர்களுடைய தாக்குதலுக்கு சமமான நடவடிக்கையாகவே இருக்கும். அந்த அளவைத்தாண்டி மற்ற இடங்களிலும் நிலைமையை விபரீதம் ஆக்கும் அளவுக்கு போகாது. அந்தந்த பகுதி தளபதிகளுக்கு இந்த விஷயத்தில் சுதந்திரமான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இந்திய வீரர் ஹேம்ராஜின் துண்டிக்கப்பட்ட தலை டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோ காட்சியின் நம்பகத்தன்மை பற்றி ராணுவம் ஆய்வு செய்து வருகிறது. ஆய்வில் அது உண்மை என்று தெரிய வந்தால், உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள், இது போன்ற காட்சிகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. நமது வீரர்களை சாதனை நாயகர்களாக (ஹீரோ) மட்டுமே காட்ட வேண்டும்.
கடந்த 2010-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலம் மச்சில் என்ற இடத்தில் நடைபெற்ற ‘என்கவுண்டர்’ தொடர்பாக இரு அதிகாரிகள் மற்றும் சில வீரர்கள் மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை, ராணுவத்தினரின் இதுபோன்ற தவறுதலான நடவடிக்கைகளுக்கு எதிரான வலுவான செய்தியாக அமையும். மனித உரிமை மீறல்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாதெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.