இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு அந்தத் தாக்குதலுக்கு உதவியது என்று குறிப்புணர்த்தும் தமது அரசின் அதி கூடிய ரகசிய ஆவணங்கள் குறித்து ஒரு விசாரணக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
கேள்விகள்
இந்தத் தாக்குதலில் பிரிவினை வாதத்தை முன்னெடுத்த பிந்தரன்வாலே உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதல் நடவடிக்கைக்கு பிரிட்டனின் சிறப்பு அதிரடி வான்படையினர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றினர் என்பது முப்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் தெரியவருகிறது என்றும், அது தொடர்பில் கூடுதல் தலவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் பிரிட்டனின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் வாட்ஸன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது, அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசு நடந்து கொண்ட விதம் குறித்து தவிர்க்க முடியாத சில கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்தத் தகவல்கள் எல்லாம் ஊடகங்களில் மட்டுமே வந்துள்ளன என்றும், இதுவரை தம்முடன் எந்தத் தகவலும் பிரிட்டிஷ் அரசால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் சையத் அக்பருதின் கூறுகிறார்.
எனினும் இந்த விஷயத்தை இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசுடன் பேசும் என்றும், அவர்களிடமிருந்து தகவல்கள் கோரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மறுப்பு
தாக்குதலை அடுத்து வட இந்தியாவின் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன.
இதேவேளை இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு பங்கிருந்தது என்பது குறித்து, தனது பார்வைக்கு ஏதும் வரவில்லை என்கிறார் ஆபரேஷன் புளூஸ்டார் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த நடவடிக்கைக்கு தலைமை வகித்திருந்த இந்திய இராணுவத் தளபதி லெப். ஜென்.கே.எஸ் பிரார்.
ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தொடர்பில் இந்திய அரசுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் எந்தவிதமான தகவல் தொடர்புகளும் இருந்ததாக தனக்குத் தெரியவில்லை எனவும் ஜெனரல் பிரார் பிபிசியிடம் தெரிவித்தார். -BBC