இலங்கை–தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ‘விஷ்வஸ்ட்’ மூலம் அழைத்து செல்லப்பட்டு, இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்திய–இலங்கை சர்வதேச கடல் எல்லையில் ‘சக்தி’ எனும் இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
இதற்காக 52 மீனவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில், இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம், உள்ளூர் போலீசார் ஒப்படைக்கப்பட்டனர்.
அதே போன்று விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள் ‘சக்தி’ எனும் இலங்கை கடற்படை கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு, காரைக்காலில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
இதேவேளை, தமிழக மீனவ பிரதிநிதிகள், இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை சென்னையில் 20–ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இருநாட்டு மீனவர்கள் பரஸ்பர விடுதலை நடைபெற்று இருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோன்று இலங்கையை சேர்ந்த 23 மீன்பிடி படகுகளும், 124 மீனவர்களும், இந்தியாவை சேர்ந்த 38 மீன்பிடி படகுகளும், 391 இந்திய மீனவர்களும் பரஸ்பரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.