கேஜரிவால் ஒரு “பொய்யர்’: ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ புகார்

vindkumarதேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து “ஆம் ஆத்மி’ தலைமையிலான தில்லி அரசு விலகிச் செல்கிறது. முதல்வர் கேஜரிவால் ஒரு பொய்யர் என அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வினோத் குமார் பின்னி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அரசு அமைத்தபோது அமைச்சரவையில் இடம் அளிக்காததற்கு வினோத் குமார் பின்னி எம்.எல்.ஏ. அதிருப்தி தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது. இந் நிலையில், செய்தியாளர்களிடம் புதன்கிழமை அளித்த பேட்டியின் போது ஆம் ஆத்மி அரசின் செயல்பாடு மீது அவர் அதிருப்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் அளித்தது. தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வர் கேஜரிவால் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார். இது முதல்வர் கேஜரிவாலின் செயல்பாடுகள் அதை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர் ஒரு பொய்யர். எனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால், நான் விரக்தி அடையவில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்பவே விரும்பினேன். கட்சியில் உள்ள வெளிப்படைத் தன்மை, நம்பகத் தன்மை குறித்து மேலும் பல விவரங்களை வியாழக்கிழமை (ஜனவரி 16) செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளிப்படுத்துவேன் என்றார் பின்னி.

கேஜரிவால் பதிலடி: இதுகுறித்து தில்லி பிரதேச முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எம்எல்ஏ பின்னி முதலில் அமைச்சர் பதவி கேட்டார். அதன் பிறகு மக்களவைத் தேர்தலில் போட்டியிட “சீட்’ கேட்டார். அவர் கூறுவதை எல்லாம் நான் செய்ய முடியாது. அவர் அமைச்சர் பதவி கேட்ட போது மறுத்தோம்.

அதன் பிறகு எனது வீட்டுக்கு வந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட “சீட்’ ஒதுக்குமாறு கேட்டார். தற்போதுள்ள எம்எல்ஏக்கள் யாருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட “சீட்’ தருவதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளது.

தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில்கூட அவர் எந்த விஷயத்தையும் எழுப்பவில்லை. அவரது நோக்கம் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.

மக்கள் பிரச்னைகளை நிறைவேற்றும் ஒரு முக்கியமான அரசாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விமர்சனங்களை நாங்கள் வரவேற்கிறோம். அது பொதுமக்களிடம் இருந்து வந்தாலும் சரி, ஊடகம் மற்றும் பாஜகவிடம் இருந்து வந்தாலும் சரி, அதை நாங்கள் வரவேற்போம். பின்னி எம்எல்ஏ தொடர்பான பிரச்னையை கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கையாளுவார்’ என்றார் கேஜரிவால்.

பின்னி மறுப்பு: ஆனால், கேஜரிவாலின் கருத்துக்கு பின்னி மறுப்புத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பின்னி கூறுகையில், “நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு அரவிந்த் கேஜரிவால் வீட்டுக்குச் சென்றிருந்ததாக அவர் கூறியிருந்தால் அது பெரிய பொய். அவரிடம் அமைச்சர் பதவி தருமாறு நான் கேட்கவில்லை’ என்றார்.

லட்சுமி நகர் தொகுதி எம்எல்வான வினோத் குமார் பின்னி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: