சசிதரூர் மனைவி மரணம்; தற்கொலை என சந்தேகம்

tharoor_sunandaஇந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வெள்ளியன்று இறந்து காணப்பட்டதாக இந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக சஷி தரூர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கிலும் அது தொடர்பான பரபரப்பு விவாதங்கள் நடந்துவந்தன.

சுனந்தாவின் சடலம் டில்லியில் இருக்கும் ஓட்டலில் வெள்ளியன்று மாலை கண்டெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஷி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான பரபரப்பான தகவல்கள் அவருடைய திருமணத்திற்கு வெளியிலான தொடர்புகளை அம்பலப்படுத்தியதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.

அதேசமயம், தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக மனமொப்பி வாழ்வதாக தெரிவித்திருந்த சசிதரூரும் அவரது மனைவியும் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான அதிகாரப்பூர்வமற்ற டூவிட்டுகளே தங்கள் தொடர்பான தேவையற்ற சர்ச்சைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த சஷி தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சஷி தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சஷி தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியில், அன்றைய காலகட்டத்தில் சஷி தரூரின் நெருங்கிய சிநேகிதியாக இருந்த சுனந்தா புஷ்கருக்கு இலவசமாக பங்குகள் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சஷி தரூர் தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களை சஷி தரூர் அப்போது மறுத்தார் என்றாலும் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு சிறிதுகாலம் கழித்து தனது சிநேகிதியாக இருந்த சுனந்தாவை சஷி தரூர் முறைப்படி திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டார்.

இருவருமே ஏற்கெனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றிருந்தவர்கள் என்பதால் இது இவர்கள் இருவருக்கும் மூன்றாவது திருமணம்.

2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் விலகிய சஷி தரூர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார். -BBC

TAGS: