காங்கிரஸின் பிரதமர் பதவி வேட்பாளர் ராகுல் அல்ல என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு இறுதியானது என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
தில்லி தால்கடோரா விளையாட்டரங்கில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, மூத்த தலைவர்களான சுஷீல் குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம், வே. நாராயணசாமி உள்பட சுமார் 20,000 காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியது முதல் பேசிய பல்வேறு தலைவர்களும் “ராகுல் காந்தியை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர்.
அப்போது தனது பேச்சைத் தொடங்க சில நிமிடங்கள் இருக்கும் முன்பே சோனியா காந்தி முன்வந்து “இந்த விவகாரத்தில் ஒரு முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி எடுத்து விட்டது. அந்த முடிவு இறுதியானது. அதை மீண்டும் வற்புறுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்.
பிறகு, சில தலைவர்களின் பேச்சைத் தொடர்ந்து, சோனியா காந்தி பேசியதாவது:
முரண்பாடுகள் கொண்ட அபாயகரமான சில அமைப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஜவாஹர்லால் நேரு கூறினார்.
நம்மை எதிர்ப்பவர்கள், மக்களிடையே மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வன்முறை, பதற்றம் ஏற்படக் காரணமாக உள்ளனர்.
எக்காலத்திலும் வகுப்புவாத சிந்தனைகளுடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டது கிடையாது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பொருளாதார வளர்ச்சி மூலம் மட்டுமே சரி செய்து விட முடியாது.
அதை கருத்தில் கொண்டுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று சோனியா பேசினார்.