போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்னா: கேஜரிவால் மிரட்டல்

aravaind_kejriwalதங்களது கடமையைச் செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட போலீஸார் மீது வரும் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 10 மணிக்குள் மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அமைச்சகத்துக்கு முன்புறம் அமர்ந்து தர்னாவில் ஈடுபடுவேன் என்று முதல்வர் கேஜரிவால் மிரட்டல் அறிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, தில்லி காவல் துறையை பிரதேச அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.

முதல்வர் கேஜரிவால், அமைச்சர்கள் ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, மணீஷ் சிசோடியா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கேஜரிவால் கூறியது:

தேசிய தலைநகரில் குற்றங்களின் சதவீதம் மிகவும் அதிகரித்துள்ளது. நகரில் குற்றங்கள் எங்கு நிகழ்ந்தாலும் மக்கள் அதற்கு தீர்வு கேட்டு எங்களிடம்தான் வருகின்றனர். அவர்கள் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்பதில்லை. ஆகவே, தில்லி பிரதேச அரசிடம் தில்லி காவல் துறையை ஒப்படைக்க வேண்டிய முக்கியமான தருணம் இது. தேவைப்பட்டால், புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட பகுதியையும், லுட்யன்ஸ் மண்டலப் பாதுகாப்பு பொறுப்பையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். பிற பகுதிகளின் சட்டம் – ஒழுங்கு பராமரிக்கும் கட்டுப்பாட்டை தில்லி அரசிடம் வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், கடமையைச் செய்வதில் அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் நால்வரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.

கேஜரிவால் சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியும் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுவருவதாக அவரிடம் கூறினார் எனத் தெரிகிறது.

நடவடிக்கை எடுக்காவிட்டால் தர்னா: இதனிடையே, தில்லி பிரதேச அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தில்லியில் நடைபெற்றுவரும் தொடர் குற்றச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் அடங்கிய கடிதத்தை உள்துறை அமைச்சரிடம் முதல்வர் கேஜரிவால் வழங்கியுள்ளார். மேலும், தங்களது கடமையைச் செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட சாகர்பூர், மால்வியா நகர் இன்ஸ்பெக்டர்கள், உதவி காவல் ஆணையர்கள் ஹர்பால் சிங், ஜாக்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் மீது வரும் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 10 மணிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அன்றைய தினம் காலை 11 மணிக்கு அமைச்சரவை சகாக்களுடனும் எம்எல்ஏக்களுடனும் சேர்ந்து உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக் முன்புறம் அமர்ந்து தர்னாவில் முதல்வர் ஈடுபடுவார். இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளதாக அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: