ஆஸ்திரேலிய சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும்

vaikoஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள 46 ஈழத் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி சென்றவர்கள்.

உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு கருணையோடு அடைக்கலம் தரும் நிலையில் ஆஸ்திரேலிய அரசு, பாதுகாப்பு உளவு நிறுவனம் அளித்த ஆலோசனையின் பேரில் 46 ஈழத் தமிழர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1948 டிசம்பர் 10-இல் அறிவிக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தில், கொடிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க எந்த ஒரு நாட்டிலும் அடைக்கலம் கேட்கவும், பெறவும் உரிமை உண்டு என கூறப்பட்டுள்ளது. அனைத்து உலக ஒப்பந்தங்களின்படி, தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உண்டு. அதற்கு மாறாக கடந்த பல ஆண்டுகளாக 46 ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்திருப்பதால் அவர்கள் தாங்க முடியாத துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே, 46 தமிழ் அகதிகளையும் விடுதலை செய்து, அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் தர தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

TAGS: