வாஷிங்டன் : இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகோட் மீதான விசா விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்காவிற்கு இந்தியா தரப்பில் எழுந்துள்ள அடுத்த நெருக்கடி பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என பிரபல டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மோடிக்கு விசா மறுக்கும் விவகாரம் அமெரிக்காவின் அடுத்த டென்சனாக உருவெடுக்கப் போவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் இதழில், அமெரிக்காவிற்கு அதிகரித்து வரும் விசா நெருக்கடிகள் குறித்து குறிப்பிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகேட் மீது அமெரிக்க அதிகாரிகள் விசா மோசடி குற்றம்சாட்டினர். இது தொடர்பான விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா உறவில் உரசல் ஏற்பட்டது. இதன் விளைவாக தேவ்யானி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இருப்பினும் இந்த விசா சர்ச்சை மீண்டும் தலைதூக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்படும். இந்தியாவின் பலம் மிக்க மனிதராக கருதப்படும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்து வருகிறது. இந்த விவகாரம் இறுதி நிலையை எட்டி உள்ளது. மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் பா.ஜ., வெற்றறி பெற்றால், மோடி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர். இதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.
மோடியை தகுதியற்ற மனிதர் என கருதி அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கூறப்படும் காரணம், 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதாகும். மோடியை விமர்சிப்பவர்களும், அவர் தான் கலவரத்தை ஊக்குவித்ததாக கூறினர். ஆனால் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த இந்திய கோர்ட், கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என தீர்ப்பளித்தது.
2005ம் ஆண்டு அமெரிக்க சட்டப்படி மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. மேலும் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், அவர் மத சுதந்திரத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டியது. அவர் குற்றமற்றவர் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீதான குற்றங்கள் பொய்யானவை என காட்டும் வகையில் நாட்டு மக்கள் மத்தியில் அவர் மிகப் பெரிய தலைவராக புகழ் பெற்றார். இருப்பினும் வாஷிங்டன் நிர்வாகம் அவரை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பது ஏன்? மோடி, அமெரிக்கா வருவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என நவம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு 43 காங்கிரஸ் ஒருகிணைப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம், வாஷிங்டனுடன் நல்லுறவை வைத்து கொள்ள விரும்பி இந்தியாவில் அந்நிய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்த மோடியின் பண்பு அமெரிக்க தொழிலதிபர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தேர்தலில் மோடி வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராகி விட்டால் அமெரிக்க நிர்வாகத்திற்கு உள்நாட்டில் நெருக்கடியும், உலக நாடுகளிடையே கண்டனமும் அதிகரிக்கும். ஆனால் தேசிய நலன் கருதி கொள்கைகளில் மாற்றம் செய்யவே ஒபாமா கருதுவார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவை விட பிற நாடுகளில் உள்ள ஏராளமான விரும்பதகாத தலைவர்களுடன் அமெரிக்கா தொழில் உறவு வைத்து வருகிறது. ஆனால் மோடி விவகாரத்தில் குஜராத் கலவரத்தில் தனது கவனத்தை வைத்துக் கொண்டு மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. ஆனால் மோடி பிரதமர் ஆகி விட்டால், டில்லி உடனான வாஷிங்டனின் ஒப்பந்த உறவு மிகவும் முக்கியமாகும். மோடியின் கடந்த கால வாழ்க்கையை வைத்து அவருக்கு அனுமதி மறுப்பதை விட்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்லதொரு தீர்வை காண இரு நாடுகளும் முன்வர வேண்டும். இவ்வாறு டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.