புதுடெல்லி, ஜன. 20- டெல்லியில் கடமையைச் செய்யாத 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே ஆகியோரை கெஜ்ரிவால் சந்தித்து கடமை செய்யாத போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்த புறப்பட்டனர். அவர்களை ரெயில் பவன் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். கெஜ்ரிவாலும், மந்திரிகளும் காரிலேயே இருந்தனர். உள்துறை மந்திரி அலுவலகம் அருகே அனுமதிக்க முடியாது என்று கூறி போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் மந்திரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்ற மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் ரெயில் பவன் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய கெஜ்ரிவால், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
இதுதொடர்பாக உள்துறை மந்திரி ஷிண்டே கூறியதாவது:-
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவரை கெஜ்ரிவால் பொறுமை காக்க வேண்டும். முதல் மந்திரி பதவிக்குரிய நாற்காலியின் கண்ணியத்தை கெஜ்ரிவால் காப்பாற்ற வேண்டும். உயர்ந்த பதவியை வகிக்கும் அவர் இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். டெல்லி காவல்துறையை மாநில அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்பது எங்கள் மரபு. நாங்கள் மந்தி(ரி)கள் செய்யாத பெரிய தவறுகளையா இந்த இளநிலை போலிஸ்காரர்கள் செய்து விட்டனர்..?!