வீதிக்கு வந்த தில்லி அரசு

kejகடமை தவறியதாகக் கூறப்படும் தில்லி போலீஸார் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, நாடாளுமன்றம் அருகே உள்ள சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் தர்னாவில்  ஈடுபட்டு வருகிறார். முதல்வரும்,அமைச்சர்கள் 6 பேரும்  திங்கள்கிழமை போராட்டம் நடத்திய ரயில் பவன் பகுதியில் இருந்தபடியே, அலுவலகப் பணிகளை மேற்கொண்டனர்.

ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தில்லி முதல்வர், தடையை மீறி தலைநகரில் போலீஸூக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இப் போராட்டத்தால் நாடாளுமன்றத்தை இணைக்கும் முக்கியச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், போராட்டப் பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

போராட்டம் ஏன்?:  தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, பெண்கள் – குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ராக்கி பிர்லா ஆகியோர் வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக தெரிவித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டியது, டென்மார்க் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக நான்கு போலீஸாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தார். ஆனால், அதன் மீது மத்திய உள்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 11 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகத்தை முற்றுகையிடுவதற்காக அரவிந்த் கேஜரிவால்,  அமைச்சர்கள் ஆறு பேருடன் இரண்டு கார்களில் வந்தார். அவர்களுக்குப் பின்னால், 150-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் வெவ்வேறு வாகனங்களில் ராஜ்பத் சாலை நோக்கி காலை 11 மணியளவில் வந்தனர்.

போலீஸ் வழிமறிப்பு: ரயில் பவன் அருகே சாலையில் தடுப்புகளை அமைத்து அவர்கள் வந்த வாகனங்களை போலீஸார் வழிமறித்தனர். அப்போது கேஜரிவாலிடம் பேசிய போலீஸார், “குடியரசு தின ஏற்பாடுகள் ராஜ்பத் சாலை, அதைச் சற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுவதால், இப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு மேல் கும்பலாக செல்லக் கூடாது. தர்னா செய்யும் நோக்கத்துடன் செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது’ என்றனர். இதையடுத்து, ரயில் பவன் பிரதான வாயிலுக்கு எதிரே உள்ள சிறிய தோட்டத்தில் கேஜரிவால், தில்லி அமைச்சர்கள், ஆம் ஆத்மி தொண்டர்கள் திரண்டனர்.

முதல்வர் குற்றச்சாட்டு: அங்கு கூடியிருந்தவர்களிடையே கேஜரிவால் பேசியதாவது:

தில்லியில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களும், பாலியல் தொழிலும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. குற்றம் செய்யும் நபர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடுகளுக்கு போலீஸார் துணை போகின்றனர். அவர்களில் சிலரை அடையாளம் காட்டிய தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி அளித்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் இடமாற்றலுக்காக சில உயரதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் பங்கு கொடுக்கப்படுகிறது.

குடியரசு தின விழாவுக்கு இடையூறு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால், குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது இது என்ன குடியரசு? என கேட்கிறேன். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பத்து நாள்களோ அதற்கும் அதிகமான நாள்கள் ஆனாலும் கூடப் பரவாயில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாங்கள் அரசியல் ஆதாயத்துக்காக வீதியில் போராடவில்லை. தில்லியில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் திரண்டுள்ளோம். எனவே, எங்களுடன்  பொதுமக்களும் சேர்ந்து போராட வேண்டும்’ என்று கேஜரிவால் கேட்டுக் கொண்டார்.

கூடுதல் பாதுகாப்பு: கேஜரிவால் உயிருக்கு “இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. அதனால் அவர் போராட்டம் நடத்தும் பகுதியில் நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர், தில்லி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் அதிகரிப்பு: இதற்கிடையே, அரவிந்த் கேஜரிவாலிடம் புது தில்லி மாவட்ட போலீஸ் துணை ஆணையர் எஸ்பிஎஸ். தியாகி பிற்பகல் 2 மணிக்கு பேசுகையில், “உங்கள் குழுவினரை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கிறோம். பதற்றத்தை தணிக்கவும், சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கவும் ஒத்துழைப்புத் தாருங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த கேஜரிவால், தொடர்ந்து அதே பகுதியில் தர்னாவில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 200 பேர் அப் பகுதியில் கூடி தில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

அமைச்சர் கைது; எம்எல்ஏவுக்கு அடி: தர்னாவில் பங்கேற்க வந்தவர்களை போலீஸார் அனுமதிக்காததால், ஆம் ஆத்மி கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் அவர்களுடன் நின்றிருந்த மாடல் டவுன் எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதிக்கும் அடி விழுந்தது. மேலும், கட்சித் தொண்டர்களைத் தூண்டியதாகக் கூறி பிரதேச போக்குவரத்து அமைச்சர் சௌரவ் பரத்வாஜை போலீஸார் கைது செய்து சில மணி நேரத்தில் விடுவித்தனர்.

இதற்கிடையே, தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தும் முதல்வர் கேஜரிவால், தில்லி அமைச்சர்கள் உள்ளிட்டோரை அப்புறப்படுத்தி ஜந்தர் மந்தருக்கு கொண்டு செல்வதா அல்லது அவர்களைக் கைது செய்யலாமா என்பது குறித்து உள்துறை அதிகாரிகளுடன் தில்லி போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தடையை மீறி முதல்வர் கேஜரிவால் தர்னா; பதற்றம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், அவரது அமைச்சர்களும் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய ரயில் பவன் பகுதியில் இருந்தபடியே, அலுவலகப் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, தில்லி அரசின் தலைமைச் செயலர், பல்வேறு துறைச் செயலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கோப்புகளுடன் ரயில் பவன் அருகே திரண்டனர். இதனால், தில்லி அரசு தலைமைச் செயலகமே வீதியில் செயல்படுவது போல ரயில் பவன் அருகே உள்ள நீரூற்றுப் பூங்கா திங்கள்கிழமை காட்சியளித்தது.

தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளை போராட்டப் பகுதியில் இருந்தபடி மேற்கொள்ள அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்தார். அதன்படி, முதல்வர் பார்வைக்கு வைக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் தலைமைச் செயலர் தலைமையில் அதிகாரிகள் குழு ரயில் பவன் அருகே உள்ள போராட்டப் பகுதிக்கு திங்கள்கிழமை பிற்பகலில் கொண்டு வந்தது. அவற்றைப் பார்வையிட்டுத் தனது பணிகளை வீதியில் இருந்தபடியே கேஜரிவால் மேற்கொண்டார்.

முதல்வரைப் பின்பற்றி தில்லி அமைச்சர்களும் தங்கள் துறை தொடர்பான கோப்புகளை போராட்டப் பகுதிக்கு வரவழைத்து சரிபார்க்கத் தொடங்கினர். இதன் மூலம் தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைப் பணிகள் அனைத்தும் வீதியில் இருந்தபடியே திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

 பிரதமருடன் ஷிண்டே ஆலோசனை

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தர்னா தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே திங்கள்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தில்லி முதல்வரின் புகார் தொடர்பாக பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், தில்லி நகர போலீஸ் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமும்,  நீதித் துறையும் அவற்றின் கடமையைச் செய்ய முதல்வர் அனுமதிக்க வேண்டும். கேஜரிவால் பொறுமையுடன் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கோருவது போல தில்லி போலீஸை பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் விட்டுவிட முடியாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் செய்து விட முடியாது’ என்றார்.

TAGS: