மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்தை மத்திய அரசு அளித்துள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஜைன சமூகப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் சந்தித்து, தங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது பற்றிப் பேசினார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜைன மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறுகையில், “”ஜைன சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்தை வழங்கியது தொடர்பாக எனது அமைச்சகம் விரைவில் அறிவிக்கை வெளியிடும்” என்றார்.
சிறுபான்மையினராக மத்திய அரசால் அங்கீகாரம் பெற்றதும், சிறுபான்மையினருக்கான நலவாழ்வு மற்றும் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் ஜைன மதத்தினருக்கும் பங்கு கிடைக்கும்.