இலங்கைக்கு கப்பல் விற்பனை மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது உயர் நீதிமன்றத்தில் வெளியுறவுத்துறை பதில்

shipAA

 

மதுரை: இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்க மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு  தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இலங்கைக்கான மத்திய  வெளியுறவுத்துறை இணை செயலாளர் மயானக் ஜோஷி பதில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கோவா கப்பல் கட்டும்  நிறுவனத்தில் இருந்து 2 ரோந்து கப்பல்களை வாங்குவதற்கு, இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவை ரோந்து கப்பல்கள்தான். போர் கப்பல்கள்  கிடையாது. ரோந்து கப்பலில் போருக்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருக்காது. இந்த வர்த்தக ஒப்பந்தம் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்  மதிப்புடையது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் மீதான மதிப்பு சர்வதேச அளவில் உயரும். கப்பல் வர்த்தக ஒப்பந்தம் கோவா கப்பல் கட்டும்  நிறுவனத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையிலானது. இதில் மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை.

கடந்த 3 ஆண்டாக இலங்கை  இந்தியா இடையே ராணுவ உறவு மற்றும் வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் இந்திய  கடலோர காவல்படையினர், விமானப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்களை சுடமாட்டோம் என  இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இதன் விளைவாக 2011 ஏப்ரல் முதல் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு தமிழக மீனவர்கள் யாரும்  இறக்கவில்லை.

சர்வதேச கடல் எல்லை மற்றும் இலங்கை கடல் எல்லைக்குள் செல்லக்கூடாது என தமிழக மீனவர்களை தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறோம். இதை மீறி பிடிபடும் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளோம். மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. அடுத்த  விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

TAGS: