வீரப்பன் “கூட்டாளிகளின்” மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

scourt386கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் “கூட்டாளிகள்” நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை இரத்து செய்தது.

இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

மேலும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை குற்றவாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும், மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை தனிமைச் சிறையில் அடைப்பது சட்டவிரோதம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க, அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையிலுள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் சட்ட உதவி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

வீரப்பன் “கூட்டாளிகள்” வழக்கின் பின்னணி

1991-ஆம் ஆண்டு கர்நாடக பகுதியிலுள்ள காவல் நிலையத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டது, பின்னர் 1993-ஆம் ஆண்டு பாலாறு பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் 22 பேர் கொல்லப்பட்டது, ஆக இரு சம்பவங்கள் தொடர்பிலான வழக்கில் பிலவேந்திரன், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை கடந்த 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.

வீரப்பன்வீரப்பன்

இதையடுத்து அந்த 4 பேரும், அதே ஆண்டு குடியரசுத் தலைவரிடம் தங்களின் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த கருணை மனுக்களை 9 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி குடியரசு தலைவர் நிராகரித்திருந்தார்.

அந்த நால்வரும் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் இன்றைய தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.

ராஜீவ் கொலையாளிகளுக்கும் நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களும் 11 ஆண்டுகள் கழித்தே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது, அதன் பின்னரே அவர்களைத் தூக்கிலிடவும் மத்திய அரசு உத்திரவு பிறப்பித்தது என்பதை நினைவுகூர்ந்து, அவர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற எதிர்வரும் ஜனவரி 29 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது, அப்போது இன்றைய தீர்ப்பின் அடிப்படையில், அவர்களது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்கிற நம்பிக்கை தனக்கிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

உலகத்தில் 137 நாடுகளில் தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, இனி எதிர்காலத்தில் தூக்குத் தண்டனை இந்தியாவில் அறவே அகற்றப்படுவதற்கான வழியைத் திறந்து உள்ளது எனவும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார். -BBC

TAGS: