போராட்டத்தை கேஜரிவால் திரும்பப் பெற்றார்

kejகடமை தவறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி “ஆம் ஆத்மி’ கட்சித் தொண்டர்களுடன் வீதியில் இறங்கி தர்னா நடத்திய தில்லி முதல்வர் கேஜரிவால் தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை இரவு திரும்பப் பெற்றுக் கொண்டார்.

அவரால் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இரு காவல் ஆய்வாளர்களை நீண்ட விடுப்பில் செல்லவும், தில்லி அமைச்சர்கள் புகார் கூறிய சம்பவங்கள் மீது நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உறுதியளித்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்களுடன் திங்கள்கிழமை காலை 11.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்திய போராட்டத்தை கேஜரிவாலும் அவரது அமைச்சரவை சகாக்களும் கைவிட்டு வீடு திரும்பினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு அரவிந்த் கேஜரிவால் கூறியது: “இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில முதல்வரும் அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கிப் போராடியதில்லை. மக்களுக்காக நாங்கள் முதன்முறையாகப் போராடினோம். அதற்குக் கிடைத்த ஆதரவைக் கண்டு மத்திய அரசு ஆட்டம் கண்டுவிட்டது. சர்ச்சைக்குரிய மாளவியா நகர், பஹர்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை முடியும்வரை இருவரையும் விடுப்பில் செல்ல துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மற்ற காவலர்கள் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். அதை ஏற்றுப் போராட்டத்தை முடித்துக் கொண்டோம். தில்லியில் நடைபெறும் குற்றங்களுக்கு தலைநகர போலீஸ் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் கோரிக்கையில் ஒரு பகுதி மட்டும் ஏற்கப்பட்டிருக்கலாம். ஆனால், போலீûஸ பிரதேச அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி தொடரும்’ என்றார்.

போராட்டம் ஏன்?: முன்னதாக, தலைநகரில் திருமணமான இளம் பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம், குடியிருப்புப் பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பெண்கள் போதை பொருள், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது, டென்மார்க் நாட்டு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை ஆகிய சம்பவங்கள் குறித்து தில்லி அமைச்சர்கள் சோம்நாத் பார்தி, ராக்கி பிர்லா ஆகியோர் சம்பவ பகுதிகளில் தன்னிச்சையாக கடந்த வாரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களைக் கைது செய்யாமல் போலீஸார் அலட்சியம் காட்டியதாக இரு அமைச்சர்களும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட நான்கு தில்லி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகிய இருவரிடமும் தில்லி முதல்வர் கேஜரிவால் கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டார். அதற்கு இருவரும் உரிய பதிலைத் தெரிவிக்கவில்லை என்று கூறி, உள்துறை அமைச்சக அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்தார்.

அதன்படி, அவரும் தில்லி அமைச்சர்கள் ஆறு பேரும் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் சிலருடன் திங்கள்கிழமை காலையில் தர்னாவில் ஈடுபட்டனர். இரவில் கடுங் குளிரிலும் சாலையிலேயே கேஜரிவாலும் அவரது அமைச்சர்களும் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு தூங்கினர். ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இரவைக் கழித்தனர்.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்தபோதிலும் தர்னா தொடர்ந்தது.

காலவரையின்றி இந்த போராட்டம் தொடரும் என்று அரவிந்த் கேஜரிவால் மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவருடன் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை முதல்வர் கேஜரிவால் திரும்பப் பெற்றார்.

TAGS: