சாதி மாறித் திருமணம் செய்த மகனிடம் நஸ்ட ஈடு கோரும் தந்தை

sidh_nath_sharmaதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்காக இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் தெய்திருக்கிறார்.

சித் நாத் சர்மா என்னும் ஒரு வழக்கறிஞர், தனது மகனான ”சுஸாந்த் ஜசு” ஒரு கோடி ரூபாய்கள் நஸ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஜாதிப்பெயராகவும் இருக்கும் தனது குடும்பப் பெயரை தனது பெயரில் அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவில், மிகவும் பெரிய விவகாரமாக சாதி கருதப்படுவதுடன், சாதி மாறி திருமணம் செய்துகொள்பவர்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் பல சந்தர்ப்பங்களில் தள்ளியும் வைக்கப்படுகிறார்கள்.

ஒரு வங்கி அதிகாரியான பெண்ணை திருமணம் செய்த, வரி அதிகாரியாக பணியாற்றும் ஜசு மீது இந்த மாத முற்பகுதியில் சர்மா அவர்கள் தனப்பூர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வார இறுதியில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கு வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காதலில் வீழ்ந்ததால்…

காதலில் விழுந்ததால் சரியான முடிவை எடுக்க தனது மகன் தவறிவிட்டதாக சர்மா கூறினார்.

”ஒருவருக்கு ஒழுங்கான நித்திரை இல்லாவிட்டால் அவர் அமைதியிழந்து சரியான முடிவை எடுக்க முடியாது போவார்கள். அதேபோல் எனது மகன் காதலில் விழுந்து அமைதி இழந்ததால், சரியான முடிவை எடுக்க முடியாமல் போய்விட்டார்” என்று நீதிபதியிடம் சர்மா வாதாடினார்.

இந்த வழக்கு தனது குடும்ப விவகாரம் என்று கூறிய அவர் பிபிசியிடம் பேசுவதற்கும் மறுத்துவிட்டார்.

முன்னதாக ஒரு தடவை பிபிசியிடம் பேசிய சர்மா அவர்கள், ” தனது சொந்த சாதிக்கு வெளியே திருமணம் செய்ததன் மூலம் எனது மகன் என்னுடைய கௌரவத்தை மாத்திரமல்லாமல், 400 வருட பழமை வாய்ந்த எங்கள் குடும்ப பாரம்பரியத்தையும் நிர்மூலம் செய்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

பெயரையும் பயன்படுத்தக் கூடாது

”இப்போது அவர் எனது இழப்புக்காக நஸ்ட ஈடு தரவேண்டும், என்னுடைய பெயரையும் அவர் தகப்பன் பெயராகப் பயன்படுத்தக் கூடாது” என்றார் அவர்.

தன்னுடைய மகனின் நடத்தையால் வேதனையடைந்துள்ளதாகக் கூறிய அவர், ” காதலுக்கு கண்ணில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால், ஒருவரது காதல், அதுவரை காலமும் அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது வைத்திருந்த பாசத்தை தகர்க்க அனுமதிக்கக் கூடாது” என்றும் குறிப்பிட்டார்.

சர்மாவின் மனைவியும், அவரது சகோதரிகளும் ஏனைய குடும்ப அங்கத்தவர் சிலரும் அந்த திருமணத்துக்கு போயிருக்கிறார்கள். ”அவர்கள், அவர்கள் பாசத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்” என்று சர்மா கூறுகிறார்.

தனது மகன் அவர் திருமணம் செய்த பெண்ணை அவரது விருப்பத்துடன் விவாகரத்துச் செய்து, தனது சாதியைச் சேர்ந்த பெண்ணை மணக்க வேண்டும் என்றும் சர்மா கூறுகிறார்.

சாதி என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக பிஹார் மாநிலத்தில் இருக்கும் அதேவேளை, கலப்புத் திருமணங்களுக்கு பிஹார் அரசாங்கம், 50,000 ரூபாய்கள் ஊக்கத்தொகை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: