ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகோய், நீதியரசர் சிவகீர்த்தி சிங் ஆகிய மூவர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் தன்னுடைய வாதத்தில், கூறியதாவது: ராம்ஜெத்மலானி வாதம் “பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் 1998 ஜனவரி 28 அன்று தடா கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1999 மே மாதம் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் குடியரசுத் தலைவருக்கு 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ல் கருணை மனு தாக்கல் செய்தனர். அந்தக் கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 12ல் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 2011 செப்டம்பர் 9ல் மரண தண்டனை நிறைவேற்ற ஆணை இடப்பட்டது.
கருணை மனு மீது காலதாமதம்
11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது. உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவே, குடியரசுத் தலைவரிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்” எனக் கூறினார்.
பெப்ரவரி 4
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தங்கள் வாதங்களைச் சொல்ல அவகாசம் கேட்டார். பிப்ரவரி 4ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மூவரின் தூக்குக்கு தடை
ஏற்கனவே, இந்த மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011 ஆகஸ்டு 30ல் ராம்ஜெத் மலானி அவர்கள் வாதாடியதன் பேரில், தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்றும், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் போடப்பட்ட விண்ணப்பத்தால் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மூவரின் தூக்கு ரத்தாகும்
ஜனவரி 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் 15 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்த போது, கருணை மனுக்கள் மீதான முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தையே நீதிபதிகள் காரணமாகக் கூறி இருப்பதால், மூன்று தமிழர்களின் மீதான தூக்குத் தண்டனையும் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என்று, ராம் ஜெத்மலானி அவர்கள் தன்னிடம் கூறியதாக இன்று உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது உடனிருந்த வைகோ தெரிவித்தார்.