ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே – உச்ச நீதிமன்றம்

rajvi_gandhikilledமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடந்தது.

தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கை.

இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது, “3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மூவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, “11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது.

உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவே, குடியரசுத் தலைவரிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்” என்று வாதிட்டார்.

இந்த வழக்கில், மத்திய அரசு வழக்கறிஞர் பிப்ரவரி 4-ம் தேதி தனது வாதத்தை முன்வைக்க உள்ளார்.

TAGS: