கட்ட பஞ்சாயத்திற்கு தடை தேவையற்றது : டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து

kejriwalபுதுடில்லி : கட்ட பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிப்பது தேவையற்றது எனவும், பாரம்பரிய நடைமுறைகளை காப்பதற்காகவே அவர்கள் பெண்ணுக்கு கடுமையான தண்டனை விதித்தார்கள் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் அவற்றில் வழங்கபடும் கடுமையான தீர்ப்புக்கள் குறித்தும், கட்ட பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நாடு முழுவதிலும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்தும் சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தனியார் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.
விழாவில் பேசிய அவர், கட்ட பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிக்கும் பேச்சுக்கே இடமில்லை; அத்தகைய தடைகள் தேவையற்றது; பஞ்சாயத்தார்கள் என்பவர்கள் மக்களுடன் வாழ்பவர்கள்; அவர்கள் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முறைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செலாற்றி வருகிறன்றனர்; அவர்கள் இல்லாவிட்டால் நாட்டை ஒழுங்கமைக்க முடியாது; ஆனால் அவர்கள் சில தவறான முடிவுகளையும் எடுக்கிறார்கள்; அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவு சட்டத்திற்கு புறம்பானது; அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கவுரவ கொலைகள் செய்ய உத்தரவு : அரியானா போன்ற மாநிலங்களில் உள்ள கட்ட பஞ்சாயத்துகள் தொடர்ந்து மக்கள் விரும்பாத ஆணைகளை பிறப்பித்து வருகின்றன. பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது, மார்கெட் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்கள் தங்களின் ஆண் உறவினர் துணையில்லாமல் செல்லக் கூடாது என்பது போன்ற உத்தரவுகளை பஞ்சாயத்தார் போட்டுள்ளனர். இந்த உத்தரவுகளை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பது, கவுரவ கொலைகள் செய்ய உத்தரவிட்டு வருகின்றனர். கலப்பு திருமணம் செய்பவர்கள் அல்லது ஜாதி மாறி காதல் திருமணம் செய்யும் தம்பதிகளை கொல்ல உத்தரவிடவும் கட்ட பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கி வருகின்றனர். கட்ட பஞ்சாயத்தாரின் இத்தகைய போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது. மீடியாக்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கட்ட பஞ்சாயத்து தீர்ப்புக்கள் மகளிர் அமைப்புக்களால் எதிர்க்கப்பட்ட போதிலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்வது போலீசாருக்கும், அரசுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த வாரம், 20 வயது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பெண் வேறு ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்ததால், கிராம பஞ்சாயத்தாரின் உத்தரவுபடி அப்பெண் 13 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் கட்ட பஞ்சாயத்தாருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் கூறி உள்ள கருத்து அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

TAGS: