மீனவர் பிரச்சினையில் இந்திய அரசு செவிடாகிவிட்டது: சுஷ்மா சுவராஜ்

ramanada puram_sushma_002இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டம் இராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இராமேசுவரம் தீவு பாம்பன் பகுதியில் பா.ஜ.க.வின் மீனவர் அணி சார்பில் கடல்தாமரைப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாநில மீனவர் பிரிவுத் தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் நடந்தது.

கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதரராவ்,தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் மு.சண்முகராஜ் வரவேற்றார். போராட்டத்தினை ஆரம்பித்து வைத்து கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

சுஷ்மா சுவராஜ் தனது உரையில்,

குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவமும், தமிழக மீனவர்களை இலங்கை இராணுவமும் எல்லை தாண்டியதாக அடிக்கடி கைது செய்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஏராளமானோர் விதவைகளாகி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மீனவர்கள் பிரச்சினை குறித்து பலமுறை மக்களவையில் பேசியிருக்கிறேன். பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் எந்த பயனும் இல்லை. மீனவப் பெண்கள் பலரும் விதவையாகி விட்டார்களே என்றும் அவர்களது நிலைமை குறித்தும் நீங்கள் ஒரு பெண் தானே, ஏன் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவை எடுக்க மறுக்கிறீர்கள் என்ற கேட்ட போதும் அவர் அதை கண்டு கொள்ளவே இல்லை.

இரு தினங்களுக்கு முன்பு கூட இராமேஸ்வரத்தை சேர்ந்த 38 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் அரசு ஊமையாகவும், செவிடாகவும் ஆகியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி பா.ஜ.க.ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்.

TAGS: