பெங்களூரை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கின்னஸ் சாதனை

bangalore_gagan_001பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் – ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.

பெங்களூரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் ககன் பங்கேற்றான். இதற்காக, 39 கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதாவது சுமார் 69.2 மீட்டர் தூரத்துக்கு கார்கள் நின்றன. காரின் அடிப்பகுதிக்கும், தரைக்கும் இடையிலான உயரம் வெறும் 8 அங்குலம் தான் இருந்தது.

அவ்வளவு குறுகிய இடைவெளிக்குள் ககன் ஸ்கேட்டிங் உபகரணத்தை அணிந்து கொண்டு உடலை வில்லாக வளைத்து பயணித்து லாவகமாக வெளியே வந்தான். சுமார் 69.2 மீட்டர் தொலைவையும் வெறும் 28 நொடியில் கடந்து சாதனை படைத்தான்.

இதற்கு முன்பாக பெல்காமை சேர்ந்த ரோகன் என்ற 9 வயது சிறுவன் 24 கார்கள் அணிவகுத்து நிற்க அதற்கு அடியில் பயணித்து 47 நொடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ககன் இந்த சாதனை மூலம் ரோகனை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.

சிறுவனின் திறமையை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவனை வெகுவாக பாராட்டினார்கள்.

TAGS: