மோடி பிரதமர் ஆவது நிச்சயம்: முன்னாள் மனைவி

modi_gujarat_cmநரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று நம்புகிறேன் என முன்னாள் மனைவி ஜசோதா பென் கருத்து தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடியின் முன்னாள் மனைவி ஜசோதா பென்(62), இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

பிரம்மச்சாரி என்று கூறப்படும் நரேந்திரமோடி இதுவரை தனது மனைவி பற்றி எந்த கருத்தும் கூறியது கிடையாது. இந்நிலையில் ஜசோதா பென் முதல் முறையாக பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், எனக்கு 17 வயதில் நரேந்திர மோடியுடன் திருமணம் நடந்தது. அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தொண்டராக இருந்தார். திருமணத்தால் எனது கல்வி பாதிக்கப்பட்டது. நான் அவரிடம் தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்தேன். அவரும் என்னை தொடர்ந்து படிக்கச் சொல்லிவிட்டு அவர் நாடு முழுவதும் வருடக்கணக்கில் சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார்.

அதன்பிறகு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. நான் என் குடும்பத்தினருடன் கூட செல்லவில்லை. 3 வருடங்களில் மோடியுடனான திருமணம் முறிந்து விட்டது. நானே சுயமாக சம்பாதித்து சொந்த காலில் வாழ்கிறேன்.

அதன்பிறகு அவருடன் எந்த தொடர்பும் இல்லை. அவரை சந்திக்கவும் இல்லை. அவரும் என்னை சந்திக்க வரவில்லை. அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நானும் விரும்பவில்லை.

இப்போது மோடி என்ன செய்தாலும் அதில் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். அவர் என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவார் என்பது எனக்கு தெரியும்.

மேலும் திருமணம் முடிந்ததும் எனக்கும், அவருக்கும் இடையே சுமூகமான உறவு இருந்தது. எங்களுக்கு இடையே எந்த சண்டையும் வந்தது இல்லை. நாங்கள் பிரிந்து பல வருடங்கள் ஆகியும் அவரது மனைவி என்று யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அதற்காக நான் வருத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

TAGS: