இந்தியாவின் மராட்டிய மாநிலத்திலுள்ள புலிகள் சரணாலயத்தில் தெரு நாய்கள் விடப்படுவது பெரும் சர்ச்சையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் புலிகளை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் உள்ளன.
நாக்பூருக்கு அருகிலுள்ள சந்திராப்பூர் என்ற நகர நிர்வாகம், நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து, அங்குள்ள புலிகள் சரணாலயத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விடுவித்து வருவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
தெரு நாய்களை புலிகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது அதற்கு அருகாமையில் இருக்கும் காடுகளிலோ விடுவது என்பது, இந்தியத் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று நீலகிரி மாவட்ட வனஉயிர் கழகத்தைச் சேர்ந்தவரும், புலிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவருமான விஜய கிருஷ்ணராஜ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், சரணாலயங்களில் ஆரோக்கியமாக உள்ள புலிகளுக்கு பாதிப்புகளும் ஆபத்துக்களும் ஏற்பட்டு அவை உயிரிழக்கக் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.
காட்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் புலிகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன.
நாய்கள் காடுகளில் வாழும் விலங்கு அல்ல, அவற்றை காடுகளுக்கு அருகிலோ, அல்லது புலிகள் சரணாலயம் போன்ற பகுதிகளிலோ விடும்போது, அவை புலிகளின் ஒரு முக்கிய உணவான மான்களைத் தாக்கும் என்றும், அதன் காரணமாக புலிகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு, அவை கிராமப்புறப் பகுதிகளுக்கு வர வழி செய்துவிடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்திய அரசின் வழிகாட்டலுக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக, மராட்டிய மாநிலத்துக்கு புலிகள் பாதுகாப்புக்கென வழங்கப்படும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் எனவும், அம்மாநில உயரதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வாய்ப்புகள் உருவாகும் என்றும் விஜய் கிருஷ்ணராகஜ் கூறுகிறார்.
இந்தப் பிரச்சினை குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சந்திராப்பூர் நகராட்சி ஆணையர் பிரகாஷ் பொக்காட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய புலிகள் காப்பு ஆணையம் பிரதமரின் தலைமையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. -BBC