ராஜீவ் கொலையாளிகள் மனு: மத்திய அரசு எதிர்ப்பு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

rajiv_assisnationபாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வாதிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடைந்து விட்டதால் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அட்டர்னி ஜெனரல் வாதம்: மூவரின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி முன்வைத்த வாதம்:

“கருணை மனுக்கள் மீது காலதாமதமாக குடியரசுத் தலைவர் முடிவு செய்ததால் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என மனுதாரர்கள் கோருவதை ஏற்க முடியாது. 15 பேரின் தண்டனைக் குறைப்பு கோரும் மனுக்கள் மீது கடந்த மாதம் 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ராஜீவ் கொலையாளிகளின் மனுவுக்கு பொருந்தாது.

மேலும், மூவரும் மன வேதனையுடனும் தாங்க முடியாத துயரத்துடனும் சிறையில் தண்டனையை அனுபவித்து வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. சிறையில் இருந்தபடியே தொலைதூர பல்கலைக்கழகம் மூலம் அவர்கள் பட்டம் படித்துள்ளனர்; இசைக் குழுவை நடத்தி வருகின்றனர். சிறை நிகழ்வுகளின்போது, இக்குழுவினர் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.

கருணை காட்டக்கூடாது: முக்கியமாக, தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி மாநில ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியபோது அதில் மிகத் தெளிவாக “ராஜீவ் காந்தியைக் கொல்வதுதான் எங்கள் நோக்கம்’ என்றவாறு குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நபரைக் கொல்ல வேண்டும் என்று துணிந்து செயல்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கூடாது. அவர்களுக்கு கருணையும் காட்டக் கூடாது.

மூவரின் கருணை மனுக்கள் மீதான முடிவை குடியரசுத் தலைவர் தாமதமாக எடுக்கவில்லை. 2000 முதல் 2004-ஆம் ஆண்டுவரை அவர்களின் மனுக்கள் மத்திய உள்துறை பரிசீலனையில் இருந்தது. 2005 முதல் 2011-ஆம் ஆண்டுவரை குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் மனுக்கள் இருந்தன. இந்த காலகட்டங்களில் மத்தியில் இரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர்கள் மாறியுள்ளனர். புதிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பவரிடம் குடியரசுத் தலைவர் சில விளக்கங்களைக் கேட்கும்போது அமைச்சர் தனது நிலைப்பாட்டை விளக்கி கடிதம் அனுப்புவது வழக்கம். அத்தகைய நடைமுறைகள்தான் மூவரின் கருணை மனு விவகாரத்தில் தொடர்ந்தன.

இதுபோன்ற வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு தேவையான யோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவது மத்திய அரசின் கடமை. இப்படித்தான் கருணை மனு மீது முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் வலியுறுத்த முடியாது.

ஆகவே, மற்ற வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, அதே தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நிராகரிக்க வேண்டும். அவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாகனவதி கேட்டுக் கொண்டார்.

அரசு வாதத்துக்கு எதிர்ப்பு: அவரது வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மூவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யுக் சௌத்ரி “தூக்கு தண்டனை கைதிகள் சிறையில் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று மூத்த வழக்குரைஞரான வாகனவதி கூறுவதைக் கேட்டு வியப்பு ஏற்படுகிறது. கருணை மனு நிராகரிக்கப்பட்ட கைதியின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அரசின் வாதம் தவறானது’ என்றார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூவர் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

அரசுக்கு நீதிபதிகள் கேள்வி: “எத்தனையோ வழக்குகளில் தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுள் சிறையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்போதெல்லாம் எதிர்க்காத மத்திய அரசு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை மட்டும் எதிர்ப்பதில் ஆர்வம் காட்டுவது ஏன்?’ என்று அட்டர்னி ஜெனரல் வாகனவதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மூவரின் தண்டனைக் குறைப்பு மனு மீதான விசாரணையின்போது, “ஊடகங்களில் கூட மூவரின் மனுவுக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே? அது உண்மையா?’ என்று நீதிபதிகள் கேட்டனர். அந்த முடிவில் அரசு இருப்பதாக வாகனவதி ஒப்புக்கொண்டார்.

TAGS: