மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாம்தர நாடாகும்

modiமூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:

இடதுசாரிக் கட்சிகளும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் தங்களது மோசமான ஆட்சியின் மூலம் மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப்பகுதி மாநிலங்களைச் சீரழித்து விட்டன.

நாட்டின் மேற்குப்பகுதி மாநிலங்களில் இந்தக் கட்சிகள் ஆட்சி புரியாத காரணத்தால் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன.

மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியல் நடத்தும் இந்தக் கட்சிகள், முஸ்லிம்களைத் தவறாக வழிநடத்துவதன் மூலம் வாக்கு வங்கி அரசியலையே நடத்துகின்றன.

நாட்டின் கிழக்குப் பகுதியைச் சீரழித்த அவர்களை இந்திய அரசியலில் இருந்தே மக்கள் அகற்ற வேண்டும்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜியின் அரசு அமைந்தது. இப்போது மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்து மக்கள் ஒரு பரிசோதனை செய்து பார்க்கலாம். மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸýம், மத்தியில் பாஜகவும் தங்கள் பணியைச் செய்ய வழி பிறக்கட்டும்.

இப்போது மாநிலத்தின் தலைவிதியை மேற்கு வங்க அரசால் மட்டும் மாற்ற இயலாது. மத்திய அரசு உதவியும் அதற்குத் தேவை. மத்தியில் நானும், மாநிலத்தில் மம்தாவும் ஆட்சி புரிய, எங்களை பிரணாப் முகர்ஜி மேற்பார்வையிடும் சூழல் உருவானால் அது உங்களுக்கு (மக்கள்) வெற்றியாக அமையும்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவே ஆட்சி அமைக்கும். இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற சிந்தனைக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால், இந்தியா மூன்றாம் தர நாடாகி விடும்.

தேர்தல் வரும்போதெல்லாம் மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் ஏழைகளைப் பற்றிப் பேசுகின்றனர். மதச்சார்பின்மை குறித்து முழங்குகின்றனர். ஆனால், வளர்ச்சியின் பலன்கள் முஸ்லிம்களை எட்டுவதை உறுதிசெய்ய அவர்கள் எப்போதும் பாடுபட்டதில்லை.

நாட்டிலேயே சிறுபான்மையினரின் தனிநபர் ஆண்டு வருமானம் குஜராத்தில்தான் அதிகமாக உள்ளது. அரசுக்கு அரசியலமைப்புச்சட்டம் என்ற ஒரே மதம்தான் இருக்க வேண்டும். அது தேசியவாதத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றார் நரேந்திர மோடி.

அவர் தனது உரையில் மேற்கு வங்கத்தில் பிறந்தவர்களான சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரைப் புகழ்ந்தார். ஹிந்தியில் உரையாற்றிய மோடி ஆங்காங்கே பெங்காலி மொழியிலும் பேசினார்.

கொல்கத்தாவில் முதல் முறையாகப் பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு பேசிய அவர், முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து எந்த விமர்சனமும் செய்வில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பின், பாஜக ஆட்சியமைப்பதற்கு திரிணமூல் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படலாம் என்பதால் மம்தா குறித்து விமர்சிப்பதை மோடி தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.

 “பிரணாபை பிரதமராக விடாமல் தடுத்த சோனியா குடும்பம்’

மோடி தனது உரையில், மேற்கு வங்க மண்ணின் மைந்தரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைப் புகழ்ந்து பாராட்டினார். “”குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றாலும் அவருக்கு அப்பதவியை அளிக்க காங்கிரஸ் இரு முறை மறுத்தது. 1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ராஜீவ் காந்தி கொல்கத்தாவில் இருந்தார். அவர் தில்லிக்குத் திரும்பினார்.

ஜனநாயக மரபின்படி, இந்திரா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிதான் பிரதமர் பதவிக்கு வந்திருக்க வேண்டும். நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவருக்கு பிரதமர் பதவியை காங்கிரஸôர் அளிக்கவில்லை. அது மட்டுமின்றி, ராஜீவ் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தபோது மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி, ஒரு அமைச்சராகக் கூட நியமிக்கப்படவில்லை.

மீண்டும், 2004ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகும், மூத்த அரசியல் தலைவர் பிரணாப்தான் என்ற நிலை ஏற்பட்டது. சோனியா பிரதமராக வாய்ப்பு ஏற்படாத நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப்தான் பிரதமராகியிருக்க வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். பிரணாபுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. இதை மேற்கு வங்க மக்கள் மறக்கக் கூடாது” என்று மோடி குறிப்பிட்டார்.

TAGS: